மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ:
உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது அம்மாநில சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். 
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :
அயோத்தியில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற உள்ளது. அதனால்தான் பாஜக பயப்படுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்தனர். வாரணாசி டி.எம். ( தேர்தல் அதிகாரி)  உள்ளூர் வேட்பாளர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்றுள்ளார். 
தேர்தல் ஆணையம் அதை கவனிக்க வேண்டும். இ.வி.எம்.கள் இந்த வழியில் கொண்டு செல்லப்பட்டால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது திருட்டு. நமது வாக்குகளை நாம் காப்பாற்ற வேண்டும். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம், ஆனால் அதற்கு முன், ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
ஜனநாயகத்தைக் காப்பாற்ற இதுவே (உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தல்) நமக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அகிலேஷ் யாதவ்வின் இந்த அறிவிப்புக்கு இடையே வாரணாசியின் பஹாரியா மண்டி பகுதியில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு வெளியே சமாஜ்வாடி கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.
இந்நிலையில், அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டிற்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் பதில் அளித்துள்ளார். தேர்தலின்போது சமாஜ்வாடி கட்சியை மக்கள் கண்டு கொள்ளவில்லை என்பதை அகிலேஷ் புரிந்து கொண்டார்.  
அனுராக் தாக்கூர், அகிலேஷ் யாதவ்
சிறைக்கு சென்றவர்கள் மற்றும் ஜாமின் பெற்றவர்கள் அவரது கட்சி வேட்பாளர் பட்டியலில் அதிகம் இருந்தனர். (தேர்தலில் தோற்று விடுவோம் என்பதால் ) தேர்தல் முடிவு வெளியாகும் வரை காத்திருக்க அகிலேஷ் விரும்பவில்லை.  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.