மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணிய கூடாது! தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணிய கூடாது; பெண்கள் உடையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என தெலுங்கானா மாநில கவர்னர்  தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் ஊடக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து பேசிய தெலுங்கானா மற்றும்  புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மார்ச் 8 மட்டுமின்றி அனைத்து தினமுமே பெண்களுக்கான தினம் என்பதால், அணைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று முதலில் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், மற்ற மாநிலங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியதுடன், பெண்கள்  எவ்வளவு தடைகள் போட்டாலும், அதனை உடைத்து எறிந்து மேலே வர வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்று கூறினார்.

நமது சமுதாயத்தில்,  ஆண்களுக்கு கட்டுப்பாடு என்பது வீட்டில் வைப்பது இல்லை. ஆனால்,  பெண்களுக்கு சம உரிமை கிடைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. பெண்களுக்கு மட்டுமே வீட்டிற்கு சீக்கிரம் வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள் என்றதுடன், எனவே பெண்கள்  நன்றாக படிக்க வேண்டும்.

பெண்ணுரிமை எது என்று நாம் நினைப்பதில் தான் பிரச்சினை ஏற்படுகிறது. சாதனை செய்வேன், மேலும் வளர்ச்சி அடைவேன் என்பது தான் உரிமையே தவிர, இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை;  நாகரீக உடைகள் உடுத்துவதில் கவனம் வேண்டும் மற்றவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் உடை அணிய கூடாது என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசியவர், எவ்வளவு பிரச்சினை வந்தாலும் தற்கொலை தீர்வல்ல என்று கூறியவர், பெண்கள் அதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்க கூடாது என்றும், பெண்களின் பாதை எப்போதும் மலராக இருக்காது, கல்லும் முள்ளும் உள்ள பாதையாக தான் இருக்கும். அதை தான் கோட்டையை அடையும் எண்ணத்தை பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும். பெண்கள் ஒரு இரும்பு போன்றவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும், நமது நாட்டில்,  உஜ்வாலா போன்ற திட்டங்கள் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, சம உரிமையை பெற வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டவர், ஒரு ஆண் கையில் இருக்கும் பணத்தை விட, பெண் கையில் பணம் இருந்தால் அந்த வீடே பயன்பெறும். பெண்கள் தங்கள் குறைகளை தயக்கமின்றி கூறும் வகையில் அமைப்புகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், தன்னிடம் வந்து உதவி கேட்டு வரும் பெண்களுக்கு எப்போதும் என்னுடைய அலுவலக கதவுகள்  திறந்து இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.