விவசாய நிலங்கள் வழியாக நான்கு வழிச்சாலை பணி; தி.மு.க கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 477-ஐ நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்காக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக 60 மீட்டர் அகலத்துக்கு நிலத்தை கையகப்படுத்த முயற்சி நடைபெற்றது.

இதற்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியதால் திட்டத்தை அப்போதைய அதிமுக அரசு கிடப்பில் போட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சியினரும் மாற்றுப் பாதை வழியாக நான்கு வழிச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரிக்கை விடுத்தனர்.

திரளும் விவசாயிகளை மறிக்கும் போலீஸார்

ஏற்கெனவே சில வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறை தீவிரம் காட்டுகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராஜபாளையம் முதல் புளியரை வரையிலான 71 கி.மீ தொலைவுக்கு நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் தொடங்கிய இப்பணி வடகரை கிராமத்துக்குள் வந்தபோது விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அளவீடு செய்து விளை நிலங்களுக்குள் நடப்பட்ட கற்களையும் விவசாயிகள் பிடுங்கி வீசினார்கள். அத்துடன், தி.மு.க கொடியுடன் திரண்டு வந்த விவசாயிகள் நில அளவீடு பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “வடகரை பகுதியில் சுமார் 5 கி.மீ தூரத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. அதில், வயல்வெளிகள், தோட்டங்கள், இருக்கின்றன. தென்னை, மா மரங்கள், நெல் வயல்கள், வாழைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் வழியாக சாலை அமைக்க முயற்சி நடக்கிறது.

நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு

நான்கு வழிச்சாலையை மாற்றுப் பாதையில் அமைத்தால் விவசாய நிலங்களோ குடியிருப்புகளோ பதிக்கப்படாது. அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.தேர்தல் சமயத்தில் தி.மு.க-வினர் பலரும் மாற்றுப் பாதையில் சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள். அதை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்றார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அத்துடன், நில அளவைப் பணியை அதிகாரிகள் கைவிட்டதால் போராடிய மக்கள் கலைந்து சென்றார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.