ஆசிரியர் பணியில் ஆரம்பம்; ஆளுயர சிலையால் அரசியல் அஸ்தமனம்! – ஏன் மாயமானமார் மாயாவதி!

“எனக்குப் பின்னும் எனது லட்சியம் தொடரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான என் லட்சியப் பணிகளை எனக்குப் பின்னால் தொடரும் பணியை மாயாவதியிடம் ஒப்படைக்கிறேன்” – 2001-ம் ஆண்டு அரசியலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்தபோது கன்ஷி ராம் சொன்ன வார்த்தைகள். அதே கன்ஷி ராம் இன்றிருந்தால் “என்னோடு என் லட்சியமும் புதைந்துவிடும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று சொல்லியிருப்பார். மாயாவதியின் மௌன அரசியலே அதற்குக் காரணமாக இப்போது இருந்திருக்கும். கணிக்க முடியாத அரசியல்வாதி என்று ஒருகாலத்தில் வர்ணிக்கப்பட்டவர் இன்று அரசியல் களத்தில் காணமல் போன கதையே இது!

கன்ஷி ராம் – மாயாவதி

2008-ம் ஆண்டு உலகின் சக்தி வாய்ந்த 100 பெண் தலைவர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. அந்த பத்திரிக்கையில் இந்தியாவில் சக்திமிக்க அரசியல் தலைவராக சுட்டிக்காட்டபட்டவர் மாயாவதி. அதிரடி பேச்சுகளால் அகில இந்திய அரசியலையும் தன்னை நோக்கித் திரும்பி பார்க்க வைத்தவர், இன்று இருக்கும் இடம்தெரியாமல் அமைதியாக இருப்பதன் அர்த்தம் அந்த கட்சியினருக்கே புரியவில்லை.

உத்திரபிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து டெல்லியில் கல்லுாரி படிப்பை முடித்தவர் மாயவதி நைனா குமாரி. பி.எட் படிப்பு முடித்துவிட்டு, டெல்லியில் ஒரு தனியார் பள்ளியில் ஆசியராக பணியாற்றிக்கொண்டே, ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சியிலும் தீவிரம்காட்டி வந்தார் மாயாவதி. அப்போது வட மாநிலங்களில் நிலவிய கடும் சமூக தீண்டாமைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் களமாடி வந்தது. அப்படி ஒரு அமைப்பாக செயல்பட்டு வந்தது டிஸ்-4 என்கிற அமைப்பு. இந்த அமைப்பை நடத்திவந்தவர் தான் பின்னாளில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனராக இருந்த கன்ஷி ராம். ஒருகட்டத்தில் கன்ஷி ராம் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த போது தனது கட்சிக்கு வலிமையான ஒரு பெண் ஆளுமை தேவை என்பதை அறிந்து மாயாவதியை வீடு தேடி சென்று அழைத்து கட்சியில் இணைத்துக்கொண்டார். காரணம், அன்றைக்கு ஓடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான பிரசார முழக்கங்களில் மாயாவதியின் குரல் வலுவாக இருந்தது.

கன்ஷி ராம் கட்சியின் தலைவராக இருந்தாலும், அந்த கட்சியின் முகமாக பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டவர் மாயாவதிதான். அந்த பலமே அவரை உத்திரபிரேசத்தின் அசைக்கமுடியாத சக்தியாக மாறவும் வழிவகுத்தது. 1989-ம் ஆண்டு முதல்முறை சட்டமன்றத்திற்குள் நுழைந்த மாயாவதி, அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தின் முதல்வர் அரியாசனத்திலும் அமர்ந்தார். அப்போது அவருக்கு வயது 39. அதன்பிறகு உத்திரபிரதேச அரசியலில் மட்டுமல்ல, அகில இந்திய அரசியலிலும் விறுவிறு வளர்ச்சி கண்டார். ஒருகட்டத்தில் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு குறிவைத்தார் மாயாவதி. அந்தநேரத்தில் இந்திய அரசியல் களமே பெண்களின் பிடிக்குள் வந்திருந்தது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி, தென்மாநிலத்தில் வலுவான ஒரு தலைவராக ஜெயலலிதா, மேற்கு வங்கத்தில் மம்தா, வடமாநிலங்களில் வியாபித்திருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி என்று பெண்கள் கரங்களில் இந்திய அரசியல் களம் இருந்தது.

குறிப்பாக மாயாவதியின் அதிரடி அரசியலால் உத்திரப் பிரதேசம் பல்வேறு வளர்ச்சிகளையும் கண்டது.குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களும், சிறுபான்மையினருக்கு இணக்கமான ஒரு அரசாகவும் அன்றைய மாயாவதியின் ஆட்சி இருந்தது.

பகுஜன் சமாஜ் அலுவலகம்

அதேநேரம் 2007-ம் ஆண்டு மாயாவதி நான்காவது முறையாக உத்திரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றபோது, தற்சார்பு கொள்கையாக அவரது ஆட்சி அமைந்தது. ஆடம்பரத்தின் உச்சத்திற்குச் சென்றார். பகுஜான் சமாஜ் கட்சி அலுவலகமே அரண்மனை போன்று கட்டப்பட்டது. யானை சிலைகள் உத்திரபிரதேசம் முழுவதும் முளைத்தது. கன்ஷி ராமுக்கு சிலைகள் வைத்ததைக்கூட ஏற்றுக்கொள்ளலாம், முதல்வராக இருந்த மாயாவதிக்கும் சிலை நிறுவியதை ஒடுக்கப்பட்ட மக்களே ரசிக்கவில்லை. அதுவரை மாயாவதி என்கிற தலைவர்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் உடைந்து போனது. இதன்விளைவு அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் வெளிப்பட்டது. 2012-ம்ஆண்டு நடந்த உபி சட்டமன்ற தேர்தலில் ஆட்சியிலிருந்த பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. 80 இடங்களை மட்டுமே பெற்றது பகுஜன் சமாஜ் கட்சி. அதன்பிறகு அந்த கட்சியின் அஸ்தமனமும் ஆரம்பித்தது. மாயாவதியின் ஐந்தாண்டு ஆட்சியில் நடந்த முறைகேடுகளை வைத்து அவர் மீது வழக்கு பதியப்பட்டது. ஒடுக்கபட்ட மற்றும் சிறுபான்மையினருக்கான கட்சியாக அறியப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பாதை மாறியது. குறிப்பாக 2014-ம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக ஆட்சியை பிடித்தவுடன் மாயாவதியின் குரலும் ஒடுங்கியது. பொதுவெளியில் மதவாத சக்தி என்று மாயாவதியால் அதற்கு முன்பாக விமர்சிக்கப்பட்ட பாஜக-வின் நடவடிக்கைகளை பலநேரங்களில் ஆதரிக்க ஆரம்பித்தார்.இதன்விளைவு 2017-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மேலும் படுதோல்வியை பகுஜன் சமாஜ் கட்சி சந்தித்து 19 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது.

இப்படி தொடர் சரிவிலிருந்த நிலையில் கட்சியை மீண்டும் எழுச்சி பெற செய்வார் மாயாவதி என்று கட்சியினர் எதிர்பார்த்த நிலையில் வெளியே தலைகாட்டுவதையே தவிர்க்க ஆரம்பித்தார். யோகியின் ஆட்சியில் நடந்த பல்வேறு தவறான நடவடிக்கைகளுக்கு மௌனத்தை மாயாவதி பதிலாகத் தந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவுடன் ஒரு மாநிலத்தின் முதல்வராகமுடியும் என்று நிரூபித்த மாயாவதி அதே ஒடுக்கபட்ட இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டபோது அதை கண்டிக்கக்கூட மனமின்றி அமைதிகாத்தது, யாருக்கு பயந்து இவர் மாயமாகிவருகிறார் என்கிற சந்தேகத்தை எழுப்பியது.

பாஜக-வை பலமுடன எதிர்க்க வேண்டியவர் மௌனமாக அதை ஆதரிக்கவும் செய்தார். அவர் மீதிருக்கும் வழக்குகள்தான் அதற்குக் காரணம் என்று விமர்சனங்களும் எழுந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அவரது குரல் முன்னேறிய சமூகத்தினருக்கான குரலாகவும் சில நேரங்களில் ஒலிக்க ஆரம்பித்து. குறிப்பாக மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் சட்டம், காஷ்மீர் அங்கீகாரம் ரத்து, குடியுரிமை சட்டத்திற்கு மறைமுக ஆதரவு என்று மாயாவதியின் அரசியல் பாதை மாற ஆரம்பித்து். அதுவே அவரது அரசியலின் அஸ்தமனத்திற்கும் வலுவான காரணமாகிவிட்டது. பாஜக வலுவாக அரசியல் செய்யும் நேரத்தில் அதை எதிர்த்து வலுவான ஒருஅணியை கட்டமைக்கவும் மாயாவதி தயாராக இல்லை. ஏன்? நடந்து முடிந்த உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவே இல்லை.

உ.பி தேர்தல் முடிவுகள்

மாயவதியின் இந்த அரசியல் அமைதியால் அங்கு பீம் ஆர்மி என்கிற கட்சியைத் தொடங்கிய சந்திசேகர ஆசாத் பக்கம் ஒடுக்கபட்ட மக்களின் பார்வை பட ஆரம்பித்துள்ளது. அதுவும் மாயாவதிக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.ஆனால் தன்னுடைய அரசியல் நிலைப்பாடுதான் இந்த மாற்றத்திற்கு காரணம் என்பதை அவரது அதிகார மனோபாவம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதன்விளைவு மிகப்பெரிய மாநிலத்தை ஆண்ட கட்சியாகவும், தேசிய கட்சியாகவும் பரிணாமம் பெற்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இனி பகுஜன் சமாஜ் கட்சி கரைசேருவது கடினம் என்று உணர்ந்த அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மாற்றுக்கட்சிக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.மாயாவதியின் அரசியல் அமைதிக்கு அவரது உடல்நிலையும் ஒருகாரணம் என்கிறார்கள்.அதற்காக ஒருகட்சியை காவு கொடுக்கும் மனோபாவத்திற்கு மாயாவதி சென்றுவிட்டாரா என்கிற கேள்வியும் எழுகிறது.

இரண்டாம் கட்டத் தலைவர்களை வைத்து கட்சியை வளர்க்கும் வேலையைக்கூட செய்யவில்லை. ட்விட்டரில் விமர்சனம் செய்யும் அரசியலை மட்டுமே செய்துவருகிறார். அவருக்கு பக்கபலமாக இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை அத்தனை சுகமாக இல்லை என்பது அவருக்கு புரியாதது அல்ல. அரசியலில் தான் அடைந்த உச்சம்போதும் என்கிற முடிவை மாயாவதி என்கிற தனி மனிதர் எடுக்கலாம்.ஆனால் பகுஜன் என்கிற பெரும்பான்மை மக்களுக்கான ஒரு இயக்கத்திற்கு முடிவுரை எழுத நினைப்பதுதான் மாயாவதி செய்யும் மாபெரும் தவறு.

கன்ஷிராமின் கனவும் இப்போது கரைய ஆரம்பித்துவிட்டது. உங்கள் லட்சியத்தை நான் நிறைவேற்றுவேன் என்று சொன்ன மாயாவதியின் மௌனமே அதற்கு காரணமாகிவிட்டது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.