ஆதரவற்ற சிறுமிகளை குறி வைத்து காதல் வலைவீசும் வாலிபர்கள்

தகவல் தொடர்புகள் அதிகரித்துள்ள இந்த காலத்தில் செல்போன்கள் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை. குழந்தைகள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்த கூடாது. இதன் மூலம் அவர்களது நினைவு திறன் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில் கொரோனா வந்தது.

இதனால் குழந்தைகளின் உலகமே செல்போன் என்கிற தவிர்க்க முடியாதாகவே மாறிப்போனது. வீட்டில் இருந்த செல்போன்களை எப்போதாவது குழந்தைகளிடம் விளையாடுவதற்கு கொடுத்து வந்த பெற்றோர் முழு நேரமும் செல்போனை அவர்களிடமே கொடுக்க வேண்டிய கட்டாயத்தை கொரோனா வைரஸ் உருவாக்கியது.

பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றதால் புதிதாக பிள்ளைகளுக்கு பல பெற்றோர்கள் செல்போன்களை வாங்கி கொடுத்தனர். இப்படி செல்போன் மூலம் நடைபெற்ற ஆன்லைன் வகுப்புகள் பெண் குழந்தைகளுக்கு ஆபத்தாகவே முடிந்துள்ளது.

ஆசிரியர்கள் பலரும் பெண் குழந்தைகளிடம் ஆன்லைன் வகுப்பை பயன்படுத்தி எல்லை மீறிய சம்பவங்கள் அரங்கேறியது. அதே நேரத்தில் செல்போன்களில் மூழ்கி கிடக்கும் மாணவ-மாணவிகள் தவறான வலைதள பக்கங்களையும் தேட தொடங்கினார்கள்.

இதன் மூலம் செல்போனில் எதையெல்லாம் பார்க்க கூடாதே அதையெல்லாம் பார்க்க கூடிய கட்டாயம் மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்டது. இப்படி கொரோனா கால ஆன்லைன் வகுப்புகள் மாணவ-மாணவிகளுக்கு நல்ல வி‌ஷயங்களை கற்று கொடுத்ததோ இல்லையோ கெட்ட வி‌ஷயங்களை அள்ளிக் கொடுத்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமீப காலமாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் நடைபெற்று கொண்டே இருக்கின்றன.

இதுபோன்று பாதிக்கப்படும் சிறுமிகளில் பெரும்பாலானோர் ஆதரவற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சி தகவலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே மூழ்கி கிடக்கிறார்கள். அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு பிறகு பள்ளி மாணவ-மாணவிகளும் பெரும் அளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளனர்.

அந்த வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களில் மாணவிகளும் அதிகளவில் உள்ளனர். கொரோனா பரவலுக்கு பிறகு குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் 70 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தில் 1,982 வழக்குகள் பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்பாக போடப்பட்டுள்ளது. இது தவிர 802 பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளன. 2020, 2021-ம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் பொறுத்தவரை 30 சதவீதம் உறவினர்களால் அரங்கேற்றப்படுகிறது. அதே நேரத்தில் நண்பர்களாலேயே 60 சதவீதம் பாலியல் தொல்லைகள் நடைபெறுவது தெரிய வந்துள்ளது. 10 சதவீதம் அளவுக்கே வெளியாட்கள் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை 1000 வழக்குகள் பதிவாகி இருந்ததும், இது ஆண்டு முடிவதற்குள் 2 ஆயிரத்தை எட்டியதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஆண்டு கடந்த 3 மாதங்களாக பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் எல்லை மீறும் அளவுக்கே சென்று கொண்டுள்ளன.

இந்த பாலியல் அத்து மீறல்கள் தொடர்பாக பெண் போலீசார் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளன. பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சிறுமிகள் குற்ற உணர்ச்சியில் தவிப்பதும், வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவுக்கு கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாவதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அதுபோன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பெண் காவலர்கள் கவுன்சிலிங் அளித்து வருகிறார்கள். இந்த கவுன்சிலிங்கின்போது இத்துடன் எதுவும் முடிந்து போய் விடவில்லை. இன்னும் வாழ்க்கையில் நிறைய வி‌ஷயங்களை பார்க்க வேண்டி உள்ளது. எனவே மனம் தளறாமல் செல்ல வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை பெண் போலீசார் சிறுமிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.

எந்த மாதிரியான சிறுமிகள் மீது பாலியல் அத்துமீறல்கள் மிகவும் தைரியமாக நடைபெறுகிறது என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறுமிகளை அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு காதல் வலைவீசி பின்னர் தங்களது காம இச்சைக்கு அவர்களை பயன்படுத்தி கொள்ளும் இளைஞர்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து இருப்பதும் அதிர்ச்சி அளிக்கும் வி‌ஷயமாக மாறி இருக்கிறது.

பாலியல் விவகாரங்களில் பெண் குழந்தைகளை வீழ்த்தி அதில் சுகம் காணும் இளைஞர்கள் அதிகரிப்பதற்கு பெற்றோர்களே முக்கிய காரணம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். தங்களது பிள்ளை மகனாக இருந்தாலும், மகளாக இருந்தாலும் சரி ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும் என்பதே போலீசாரின் கோரிக்கையாக உள்ளது.

பெண் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்ப்பதுபோல ஆண் பிள்ளைகள் மீதும் பெற்றோரின் கவனம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களை நல்லவர்களாக வளர்க்க முடியும் என்றும் போலீசார் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது சமூகத்தின் கையிலேயே உள்ளது. தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவர்கள் பள்ளி-கல்லூரி சென்று வந்த பின்னர் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். அவர்கள் மனதில் என்ன உள்ளது? எதையாவது மறைக்கிறார்களா? என்பதை புரிந்து கொள்ளும் வகையில் அவர்களோடு பொறுமையோடு பேச வேண்டும்.

அப்போதுதான் அவர்கள் மனதில் உள்ளதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக செல்போன் பயன்படுத்துவதை குறைத்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். இப்படி அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு கடிவாளம் போடும் வகையில் கவனமுடன் செயல்பட்டால் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களை குறைக்க முடியும் என்பதே போலீசாரின் நம்பிக்கையாக உள்ளது.

பெண் குழந்தைகளின் மீதான குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த சட்டத்தாலும் பெரிய அளவில் குழந்தைகள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.

சிறுமிகளை ஏமாற்றி திருமணம் செய்யும் வாலிபர்கள் மீதும் போக்சோ வழக்குகள் பாய்கின்றன. ஆனால் சிறைக்கு செல்லும் வாலிபர் ஜாமீனில் வெளியில் வந்ததும் மீண்டும் சிறுமியை அழைத்துக்கொண்டு ஓடி விடும் சம்பவங்களும் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இப்படி அதிகரித்து வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் காவல் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அது ஓரளவுக்கு பாலியல் அத்துமீறல்களை தடுப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சென்னையை பொறுத்தவரையில் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. சென்னை மாதவரத்தில் தெரிந்தவர்கள் என்ற முறையில் பக்கத்து வீட்டில் தனது மகனையும், மகளையும் விட்டு சென்ற பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த வீட்டில் விட்டு சென்ற சிறுமியிடம் வீட்டு உரிமையாளர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த வாரம் சென்னை ராமாபுரத்தில் நடந்த இன்னொரு சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சிறுமி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைதாகி இருந்தனர்.

இந்த நிலையில் வியாசர்பாடியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை தூக்கி சென்று பொது கழிவறையில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்படி ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறுமிகளின் மீதான பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் பல சிறுமிகள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாக்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிறுமிகள் மீதான இந்த பாலியல் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு காவல் துறையினர் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு சட்டங்களும் மேலும் கடுமையாக வேண்டும். அப்போதுதான் வரும் காலங்கள் பெண் குழந்தைகளுக்கு வசந்த காலங்களாக அமையும் என்றால் அது மிகையாகாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.