நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் 8.70 லட்சம் பணியிடங்கள் காலி- மத்திய அரசு தகவல்

புதுடெல்லி:

பாராளுமன்ற இரு அவைகளிலும் நேற்று கேள்வி நேரத்தின்போது அரசு துறைகளில் உள்ள காலியிடங்கள் தொடர்பாக உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் பதிலளித்தனர்.

இதில் குறிப்பாக, மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் காலியிடங்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் மக்களவையில் பதிலளித்தார்.

அவர் கூறும்போது, ‘1-3-2020 நிலவரப்படி மத்திய அரசின் 77 துறைகளில் 40 லட்சத்து 4 ஆயிரத்து 941 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதில் 31 லட்சத்து 33 ஆயிரத்து 658 பேர் பணியாற்றுகிறார்கள். 8 லட்சத்து 71 ஆயிரத்து 283 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த புள்ளி விவரங்கள் செலவினத்துறையில் இருந்து பெறப்பட்டவை’ என தெரிவித்தார்.

ரெயில்வேயில் 2.98 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், 1.40 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் மக்களவையில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், ரெயில்வேயில் காலியாக உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் தேவை இல்லை எனவும் கூறினார்.

இதைப்போல நாடு முழுவதும் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கல்வித்துறை இணை மந்திரி சுபாஸ் சர்க்கார் பதிலளித்தார்.

அப்போது அவர், நாடு முழுவதும் பல்வேறு ஐ.ஐ.டி.களில் 4,300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக கரக்பூர் ஐ.ஐ.டி.யில் 815 காலியிடங்களும், மும்பையில் 532 இடங்களும், தன்பாத்தில் 447 இடங்களும், சென்னையில் 396 இடங்களும், கான்பூரில் 351 இடங்களும், ரூர்க்கியில் 296 இடங்களும் காலியாக உள்ளதாக கூறினார்.

இந்த பணியிடங்களை விரைவாக நிரப்புமாறு அனைத்து ஐ.ஐ.டி.களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டிருப்பதாக கூறிய சர்க்கார், இந்த பணியமர்த்தல் நடவடிக்கையில் பல நிலைகள் அடங்கியிருப்பதால் நேரம் எடுக்கும் எனவும் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சுபாஸ் சர்க்கார், காஷ்மீர், ஆந்திரா, பீகார், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் தலா ஒரு மத்திய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், இந்த காலியிடங்களை நிரப்புவது ஆண்டு முழுவதும் நடைபெறும் ஒரு தொடர் நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.