சென்னையில் தனியார் பள்ளி வளாகத்தில் வாகனத்தை பின்னோக்கி இயக்கியபோது விபரீதம் – சக்கரத்தில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு: ஓட்டுநர், உதவியாளர் கைது; பள்ளி நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் பின்னோக்கி வந்த பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 7 வயது மாணவன்உயிரிழந்தான். இந்த விபத்து தொடர்பாக வேன் ஓட்டுநர், பெண் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைசேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இருவரும் ஐ.டி ஊழியர்கள். இவர்களது 7 வயது மகன் தீக்சித். இந்தச் சிறுவன் வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலை 8.40 மணி அளவில் வழக்கம் போல, மாணவன் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளான். வேனில் இருந்து இறங்கி வகுப்பறைக்குச் சென்றவன், தான் மறந்து வைத்துவிட்டு வந்த சாப்பாட்டுப் பையை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி வந்துள்ளான். அப்போது ஓட்டுநர் பூங்காவனம், வேனை பார்க்கிங் செய்வதற்காக பின்னோக்கி இயக்கியுள்ளார்.

அப்போது, மாணவன் மீது எதிர்பாராத விதமாக வேன் மோதியுள்ளது. இதில், வேனின்பின் சக்கரம் மாணவன் மீது ஏறி இறங்கியது.இதில் படுகாயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே தீக்சித் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதையடுத்து அவனது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள், உதவி இயக்குநர் ஷைபா தலைமையில் சம்பவ இடம் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர் தரப்பினர், உதவியாளர்கள், சக ஓட்டுநர்கள் என அனைத்துதரப்பினரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். பள்ளியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதை அடிப்படையாக வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உயிரிழந்த சிறுவன் தீக்சித்.

முதல்கட்டமாக வேன் ஓட்டுநர் பூங்காவனம், வாகனப் பெண் பாதுகாவலர் ஞானசக்தி ஆகியோரை கைது செய்தனர். பள்ளி முதல்வர் தனலட்சுமி, தாளாளர் ஜெயசுபாஷ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிறுவன் உயிரிழந்ததை கேள்விப்பட்டு அவனது பெற்றோர், உறவினர்கள் சம்பவ இடம் விரைந்தனர். பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்த துயரச் சம்பவம் குறித்து தீக்சித்தின் தாய் ஜெனிபர் கண்ணீர் மல்க கூறியதாவது:

என் மகனுக்கு காலையில் உணவூட்டி, பள்ளி வேனில் அனுப்பி வைத்தேன். சிறிது நேரத்தில் ‘‘உங்கள் மகன் மீது பள்ளி வேன்மோதிவிட்டது. உடனே வாருங்கள்’’ என்று பள்ளியில் இருந்து போன் அழைப்பு வந்தது.ஓடோடி சென்றபோது, மகனை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகக் கூறினர். சிறிது நேரத்தில் அவன் இறந்து விட்டதாகக் கூறுகின்றனர்.

எப்படி இறந்தான் என பள்ளி நிர்வாகத்தினர் யாரும் சரியான தகவலைச் சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளைக் கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டேன். விபத்தை நிகழ்த்திய வேன் ஓட்டுநருக்கு 64 வயது இருக்கும். அவருக்கு கண்ணும் சரியாகத் தெரியவில்லை. காதும் சரியாக கேட்கவில்லை. அதனால்தான் எனது மகனின் அலறல் ஓட்டுநருக்கு கேட்கவில்லை. இப்படிப்பட்ட ஓட்டுநரை பணியமர்த்திய பள்ளிமுதல்வர், நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மாணவன் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு, சென்னை மாவட்டமுதன்மை கல்வி அதிகாரி மார்ஸ்-க்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, பள்ளிக்கு சென்றமுதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ், பள்ளி முதல்வர் தனலட்சுமி, தாளாளர் ஜெயசுபாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தார். சம்பவம் தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கினார்.

பள்ளி வாகன விதிமுறைகள்

‘பள்ளி வாகன ஓட்டுநர்கள் 21-50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓட்டுநருக்கு உதவியாளராக இருப்பவர் நடத்துநர் உரிமம் எடுத்திருக்க வேண்டும். மாணவிகளை அழைத்துச்செல்லும் வாகனங்களில் பெண் உதவியாளரை மட்டுமே நியமிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இருக்கைகளுக்கு மேல் பள்ளி குழந்தைகளை ஏற்றக் கூடாது’ என பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ள தாக போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.