வங்காள விரிகுடா பிராந்திய பாதுகாப்பிற்கு அதிக… முன்னுரிமை:பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி:”தற்போதுள்ள சர்வதேச சூழலில், நம் பிராந்திய பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என, பிரதமர் மோடி, ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா, வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய வங்க கடல் நாடுகள் இணைந்து, பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்காக, ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. ‘பிம்ஸ்டெக்’ அமைப்பின் ஐந்தாவது மாநாடு, இலங்கையில் நேற்று நடந்தது.

இதில், பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்று, துவக்க உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:சர்வதேச சவால்களின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் உள்ளன. கொரோனா பரவல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து, நம் மக்களும், பொருளாதாரமும் இன்னும் மீளவில்லை.

விரைந்து நடவடிக்கை

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவில் நிலவும் சூழல், சர்வதேச விதிகளின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இத்தகைய சூழலில், பிம்ஸ்டெக் நாடுகளின் பிராந்திய கூட்டுறவு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உறுப்பு நாடுகள் இடையே இணைப்பு, வளம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய, வங்காள விரிகுடாவை பாலமாக அமைக்க வேண்டிய தருணம் இது. நம் பிராந்திய பாதுகாப்பிற்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.

இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளின் இறையாண்மை, உரிமை, தடையற்ற வர்த்தகம் ஆகியவற்றுக்கான சாசனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் முடிவுகள், பிம்ஸ்டெக் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். உறுப்பு நாடுகள் இடையே, பரஸ்பரம் வரியில்லா வர்த்தகம் செய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் முனைவோர் மற்றும் ‘ஸ்டார்ட் அப்’ வல்லுனர்களின் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்.

பேரிடர் மேலாண்மையில் கூட்டாகச் செயல்படுவதற்கு, பிம்ஸ்டெக் நாடுகளின் பருவ நிலை மையம் அவசியம். ‘மாஸ்டர்’ திட்டம்இந்த மையம் அமைக்கும் பணிகளை மீண்டும் துவக்க, இந்தியா 2,250 கோடி ரூபாய் வழங்கத் தயாராக உள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன், உறுப்பு நாடுகளின் போக்குவரத்து இணைப்புக்கு உருவாக்கியுள்ள ‘மாஸ்டர்’ திட்டத்தை விரைந்து செயல்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

கூட்டுறவு சாசன தீர்மானம்

‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில், உறுப்பு நாடுகளின் இறையாண்மை, உரிமை ஆகியவற்றை பாதுகாக்கும் செயல் திட்டங்கள் அடங்கிய கூட்டுறவு சாசன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மிக முக்கியமான இந்த தீர்மானம் வாயிலாக, பிம்ஸ்டெக் அமைப்பிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். பிம்ஸ்டெக் தலைமைச் செயலக பணிகளுக்கு, 7.60 கோடி ரூபாய் வழங்கப்படும் என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ருத்ரன்டா டண்டன் வெளியுறவு துறை கூடுதல் செயலர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.