அவசர ஆவண பதிவிற்காக தட்கல் முறை அறிமுகம்- சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

சென்னை:
சட்டசபையில் இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
1.பொதுமக்கள் தாங்கள் பெறும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிகவரித்துறையில் ‘எனது விலைப்பட்டியல் – எனது உரிமை’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும். 
2. வணிகவரித்துறையில் வரி ஏய்ப்பினைத் தடுப்பதில் உதவுபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும். 
3. வணிகவரித்துறையின் நுண்ணறிவு பிரிவில் தனியார் தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவை பயன்படுத்தப்படும்.
4. வணிகவரித்துறையில் வரி ஆய்வுக் குழு அமைக்கப்படும். 
5. வணிகவரித்துறையின் அழைப்பு மையம் (Call Centre) மேம்படுத்தப்படும். 
6. வணிகவரி கூடுதல் ஆணையர் தலைமையில் தனி தணிக்கைப் பிரிவு உருவாக்கப்படும். 
7.சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள இரண்டு இணை ஆணையர் நுண்ணறிவு பணியிடங்கள் கூடுதல் ஆணையர் நிலைக்கு தரம் உயர்த்தப்படும்.  
8. வணிகவரித் துறையில் பயிற்சி நிலைய இயக்குநர் பணியிடம் தரம் உயர்த்தப்பட்டு அவரது தலைமையின் கீழ் எளிய வணிக பிரிவு (Indirect Taxes Wing) உருவாக்கப்படும். 
9. வரி  ஏய்ப்பைக் கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் (National Informatics Centre) உருவாக்கியுள்ள GST PRIME என்ற மென்பொருள் ரூ.47.20 இலட்சம் செலவில் வாங்கி பயன்படுத்தப்படும் 
10. வணிக வரித் துறையில் சுற்றும் படையில் (Roving Squad) பணிபுரியும் அலுவலர்களுக்கு நடப்பு நிதியாண்டு முதல் சீரூடைகள் வழங்கப்படும்
11. தீர்ப்பாயம் அல்லது உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் முந்தைய சட்டங்கள் தொடர்பான ஆணைகளில் வரி இழப்பு இனங்களைக் கையாள புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும் 
 
12. வணிகவரித் துறையில் இரண்டு அலுவலக கட்டடங்கள்  புனரமைக்கப்படும். சென்னை மத்திய கோட்டத்திலுள்ள மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தில் இயங்கி வரும் வணிகவரி அலுவலகமும் மதுரை ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகமும் 2022-23-ஆம் ஆண்டில் புனரமைக்கப்படும். இதற்கான தொடரா செலவினம் ரூ.7.80 கோடி ஆகும்.
13. பொதுமக்களுக்கு பத்திரப்பதிவு தொடர்பான சேவைகளை அளிக்க ‘ஒருங்கிணைந்த சேவை மையம்’ ரூ.1.00 கோடி செலவில் உருவாக்கப்படும்.
14. சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கான தேவைகளை நிறைவு செய்யும் வகையில்  ரூ.50.00 இலட்சம் செலவில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். 
15. பதிவுத்துறையில் ஒருங்கிணைந்த தகவல் மையம் (Unified Call Centre) ரூ.50.00 இலட்சம் செலவில் உருவாக்கப்படும். 
16. பதிவு செய்யப்பட்ட திருமணங்களுக்கான சான்றுகளில் திருத்தம் தேவைப்படின் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு நேரில் வராமல் இணையவழியாகவே விண்ணப்பித்து திருத்திய சான்றினைப் பெறும் வசதி ரூ.6.00 இலட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.
17. அவசர நிமித்தமாக பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஆவணப்பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் ‘தட்கல்’ முறை அறிமுகப்படுத்தப்படும். 
பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களில் சிலர் குறுகிய கால அவகாசத்தில் ஆவணப்பதிவை மேற்கொள்ள விரும்புகின்றனர். இவர்களின் வசதிக்காக ஆவணப்பதிவிற்கான முன்பதிவு டோக்கன்களை கூடுதல் கட்டணம் பெற்று ‘தட்கல்’ முறையில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். முதற்கட்டமாக, அதிக எண்ணிக்கையிலான ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.  ஒரு அவசர முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5,000/- கட்டணமாக விதிக்கப்படும்.
18.  அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்கள் தாங்கள் ஆவணப்பதிவு மேற்கொள்ள ஏதுவாக வார விடுமுறை நாளன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, சனிக்கிழமைகளிலும் பதிவுப்பணி மேற்கொள்ளப்படும். இதற்கு கட்டணமாக ரூ.1000/- வசூலிக்கப்படும். 
19. பதிவு நடைமுறைகள் தொடர்பாக  பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரூ.38.00 இலட்சம் செலவில் மாவட்டங்கள் தோறும் சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் நடத்தப்படும். 
20. அரசு நிலங்கள் பதிவு செய்யப்படுவதை ஆரம்ப நிலையிலேயே ‘STAR’ மென்பொருள் வழியாக தன்னிச்சையாக தடுக்கும் திட்டம்  ரூ.12.00 இலட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
சொத்து ஆவணங்கள் பதிவிற்காக தேவையான விவரங்களை இணையவழியாக உள்ளீடு செய்யும்போதே அரசு நிலங்கள், நீர் நிலை புறம்போக்குகள், இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள், வக்ஃப் வாரிய நிலங்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட நிலங்களைக் குறித்த விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டால் ஆரம்ப நிலையிலேயே இதனைத் தடுப்பதற்காக, பதிவுத்துறையின் மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்படும். இதன் மூலம் மேற்கண்ட நிலங்களைப் பதிவு செய்வது தன்னிச்சையாகவே தடுக்கப்படும். இதற்காக தொடரா செலவினமாக ரூ.12.00 இலட்சம் செலவிடப்படும்.
21. பதிவுத்துறையிலுள்ள மிகப் பழமையான 50 கட்டடங்களை அப்புறப்படுத்தி ரூ.96.64 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
22. தமிழகத்தில் 1998-க்கு பின்னர் புதிதாக ஆவண எழுத்தர் உரிமங்கள் வழங்கப்படவில்லை. பதிவுக்கு வரும் ஆவணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கூடுதல் ஆவண எழுத்தர்களை நியமிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளதைக் கருத்தில் கொண்டு உரிய அமைப்பு மூலம் சிறப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு ஆவண எழுத்தர்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும்.  இதன் மூலம் ஏறத்தாழ 20,000 நபர்கள் பயன் பெறுவர்.
23. பதிவுத்துறையில் கட்டட களப்பணி மேற்கொள்வதற்காக  பொறியியல் பட்டதாரிகளுக்கு ‘களப்பணி மேற்பார்வையாளர் உரிமம்’ வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
ஆவணங்களில் குறிப்பிடப்படும் கட்டட மதிப்பினைப் பொருத்து சார் பதிவாளர்களால் அல்லது பொதுப் பணித் துறையிலிருந்து பதிவுத் துறையில் பகராண்மையில் பணிபுரியும் பொறியாளர்களால் கட்டடங்கள் நேரில் ஆய்வு செய்யப்பட்டு கட்டட மதிப்பு உறுதி செய்யப்படுகிறது. சார்பதிவாளர்கள் பதிவுப்பணியில் கூடுதல் கவனம் செலுத்த ஏதுவாக, இக்கட்டடங்களை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக  கட்டட பொறியியல் பட்டதாரிகளின் சேவை பயன்படுத்தப்படும். இதற்காக அவர்களுக்கு  ‘களப்பணி மேற்பார்வையாளர் உரிமம்’ வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். உரிய விதிமுறைகளும் இதற்கென தனியே உருவாக்கப்படும்.
24. சங்கங்களின் ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களின் தாமத கோர்வைக்காக விதிக்கப்படும் அபராதத் தொகையை வசூலிக்க சமாதான திட்டம் செயல்படுத்தப்படும்.
25. முத்திரைத்தாள் விநியோக சீர்திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக இந்திய முத்திரைச் சட்டம், 1899-ல் உரிய சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுத்துறையில் தற்போது மிகக்குறைந்த முக மதிப்புடைய ரூ.10/-, ரூ.20/-, ரூ.50/- ஆகிய முத்திரைத்தாள்களின் பயன்பாட்டினை மாற்றி குறைந்தபட்சமாக ரூ.100/- என நிர்ணயித்து நடைமுறைப்படுத்தும் வகையில் இந்திய முத்திரைச் சட்டம், 1899-ல் உரிய திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.