முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மறைவுக்கு அனுதாபப் பிரேரணை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தொடர்பான அனுதாபப் பிரேரணைக்கு நேற்று (10) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஒதுக்கப்பட்டிருந்தது.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் அனுதாபப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் தமது அனுதாபத்தை வெளியிட்டனர்.

1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி அளுத்கமவில் பிறந்த அமரகீர்த்தி அத்துகோரல, அளுத்கம மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றதுடன், க.பொ.த உயர்தரத்தை கொழும்பு தேஸ்டன் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார்.

கணிதப் பிரிவில் உயர்தரத்தைப் பெற்ற பின்னர் சதோச நிறுவனத்தில் எழுது வினைஞராக இணைந்துகொண்ட அவர், அதில் முகாமையாளராகப் பதவியுயர்வு பெறும்வரை பணியாற்றியிருந்தார். சதோச நிறுவனத்தில் 24 வருடங்கள் சேவையாற்றிய பின்னர் அதிலிருந்து விடைபெற்று அப்போது பிரதிக் காணி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த சந்திரசிறி சூரியாராச்சி அவர்களின் அலுவலகத்தில் இணைந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து தீவிர அரசியலில் பிரவேசித்த அவர் 2008 ஆம் ஆண்டு 13,000 விருப்பு வாக்குகளைப் பெற்று வடமத்திய மாகாண சபைக்கு தெரிவானார். 2012 மாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் தெரிவானார்.

புத்தசாசன அபிவிருத்தி, பிரதேச ரீதியிலான பல்வேறு உட்கட்டுமான வசதிகளின் அபிவிருத்தி, விவசாய மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, உதவிகளை வழங்குதல் போன்றவற்றுக்கு அவர் ஆற்றியது சிறந்த சேவையாகும். குறைந்த வருமானம் பெறுபவர்கள், போர்வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பாகச் செயலாற்றினார் என சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தனது உரையில் குறிப்பிட்டார்.

2020 பொதுத் தேர்தலில் பொலனறுவை மாவட்டத்திலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான இவர் இறக்கும் போது 58 வயதாகும். இவர் 2000 ஆம் ஆண்டு திருமதி மாலானி சில்வாவை மணந்து கொண்டதுடன், இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.