'நிலைமறந்தவன்' படத்திற்கு மிரட்டல் : எச்.ராஜா கண்டனம்

'நிலைமறந்தவன்' சினிமாவிற்கு மிரட்டல் விடப்படுவதற்கு பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் வரவேற்பை பெற்ற டிரான்ஸ் படம் தமிழில் நிறைமறைந்தவன் என்ற பெயரில் டப்பாகி வெளியிடப்பட்டுள்ளது. பஹத் பாசில், கவுதம் மேனன், நஸ்ரியா நசீம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மதத்தை வைத்து வியாபாரம் நடத்தி அப்பாவி மக்களை ஏமாற்றி பிழைக்கும் போலி பாதிரியார்களையும், அவர்கள் பின்னால் இருந்து இயக்கும் சூழ்ச்சிக்கார கூட்டங்களையும் உரித்துக் காட்டுகிறது இப்படம். சமுதாய கண்ணோட்டத்துடன், அக்கறையுடன், ஏமாந்து கொண்டு திரியும் மக்களுக்காக ஒரு பாடமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அன்வர் ரஷீத்.

இந்நிலையில் தமிழகத்தில் பல ஊர்களில் இந்த படத்தை திரையிடக் கூடாது என மிரட்டல் வருவதாகவும், கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தை திரையிட வேண்டாம் என மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வந்தது. நேற்று சென்னையில் உள்ள சில தியேட்டர்களில் ஓட இருந்த படத்தை நிறுத்தி, புக் செய்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்ததாகவும், தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பா.ஜ.வின் எச்.ராஜா. காரைக்குடியில் அவர் கூறியதாவது : ‛‛டிரான்ஸ்'' என்ற மலையாள திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ‛‛நிலை மறந்தவன்'' என்ற பெயரில் திரையிடப்பட்டுள்ளது. திரையரங்கிற்கு உளவுத்துறை அதிகாரி ஒருவர் போன் செய்து மிரட்டி உள்ளார். துாத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற ஊர்களில் இந்த திரைப்படத்திற்கு போலீஸ் மிரட்டல் விடுகிறது. அதிகாரி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இளையான்குடியில், பா.ஜ., சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம் காரை அடித்து நொறுக்கியதோடு அவர் மீது தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உளவுத்துறை அவர்கள் வேலையை மட்டும் செய்யட்டும். சினிமாவை நிறுத்துவது உளவுத்துறை வேலையா. நாட்டை வன்முறையாக உளவுத்துறை மாற்ற முயற்சிக்கிறது'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.