எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கிய நாடாளுமன்ற அலுவல்கள் – பிரதமர் அவசர ஆலோசனை

புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக ‘ஆஸாதி கா அம்ருத் மகோத்சவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் `ஹர் கர் திரங்கா’ (ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) என்ற நிகழ்ச்சிக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இது குறித்து ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

சுதந்திரத்தின் 75-வது ஆண்டை, நாம் இந்தாண்டு கொண்டாடும் வேளையில், வீட்டுக்கு வீடு மூவர்ணகொடி இயக்கத்தை நாம் வலுப்படுத்துவோம். உங்கள் வீடுகளில் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தேசிய கொடியை ஏற்றுங்கள் அல்லது பறக்கவிடுங்கள். இந்த இயக்கம், தேசியக்கொடியுடனான நமது தொடர்பை மேலும் வலுப்படுத்தும்.

இன்று (நேற்று) நமது வரலாற்றில் முக்கியமான நாள். கடந்த1947-ம் ஆண்டு இதேநாளில்தான் நமது தேசிய கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது மூவர்ண கொடியுடன் தொடர்புடைய விவரங்கள், முதலாவது மூவர்ணக் கொடியை பண்டிட் நேரு பறக்கவிட்டது உள்பட, வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளேன்.

காலனி ஆட்சியை எதிர்த்து நாம் போராடியபோது, சுதந்திர இந்தியாவுக்கான கொடி பற்றி கனவு கண்டவர்களின் துணிவையும், முயற்சிகளையும் நாம் நினைவு கூர்வோம். அவர்களின் தொலைநோக்கை நிறைவேற்ற வும், அவர்கள் கனவுகண்ட இந்தியாவை உருவாக்கவும், நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரதமர் அவசர ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை முதல் நடைபெற்று வருகின்றது. அக்னிப்பாதை திட்டம், விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், முதல் 4 நாட்கள் நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கின.

இந்நிலையில் நேற்று 5-ம் நாள் மக்களவை கூட்டம் காலை தொடங்கியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளி யில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அவையை சுமூகமாக நடத்திச் செல்வது தொடர்பாக மூத்த அமைச்சர் களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பிரகலாத் ஜோஷி, அனுராக் சிங் தாக்குர், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்றத்தில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற வுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வாழ்த்து

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள எனது அனைத்து இளம் நண்பர்களுக்கும் வாழ்த்துகள். இந்த இளைஞர்களின் திறமையும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது. மனிதகுலம் ஒரு மாபெரும் சவாலை எதிர்கொண்ட காலத்தில் இவர்கள் தேர்வுக்கு தயாராகினர். தேர்வில் இந்த வெற்றியை அடைந்துள்ளனர். இத்தேர்வு மூலம் போராளிகளுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் காத்துள்ளன. மாணவர்கள் ஆர்வமுள்ள பாடங்களில் மேற்படிப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மாணவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.