ஒரே ஊசியைக் கொண்டு 30 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி… மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

கொரோனா தொற்று மீண்டும் பரவத்தொடங்கியதையடுத்து, அனைத்து மாநிலங்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள ஜெயின் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான கோவிட் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றிருக்கிறது. அப்போது ஜிதேந்திரா எனும் நபர், ஒரே ஊசி மூலம் 30 மாணவர்களுக்குத் தடுப்பூசி போட்டிருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், அந்த இடத்திலேயே வீடியோ பதிவுசெய்து ஜிதேந்திராவிடம் கேள்வியெழுப்பியிருக்கின்றனர். அப்போது ஜிதேந்திரா, பொருட்களை டெலிவரி செய்த நபர் ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டுமே கொடுத்தார் என அவர்களிடம் கூறினார்.

மேலும் தொடர்ந்து, பல நபர்களுக்கு ஒரே ஊசியைக்கொண்டு, ஊசி போடக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா, தெரியாத என்று பெற்றோர்கள் மீண்டும் கேள்விகேட்டனர். அதற்கு ஜிதேந்திரா, “அது எனக்குத் தெரியும். அதனால்தான் நான், அவர்களிடம் ஒரே ஊசி பயன்படுத்த வேண்டுமா என்று கேட்டேன். அவர்களும் ஆமாம் என்று சொல்லிவிட்டனர். நானும், அவர்கள் சொன்னதைத் தான் செய்தேன். இதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது?” என அலட்சியமாகப் பதில் கூறினார்.

கொரோனா தடுப்பூசி

இந்த விஷயம் பெரிதாகவே, உடனடியாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் அதனை ஆய்வு செய்யுமாறு, பொறுப்பு கலெக்டர் ஷிதிஜ் சிங்கால் உத்தரவிட்டார். ஆனால் ஆய்வின் போது ஜிதேந்திரா இல்லை என்றும் அவரின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன.

இருப்பினும், மத்திய அரசின் “ஒரு ஊசி, ஒரு முறை” என்ற உறுதிமொழியை மீறியதாக ஜிதேந்திரா மீது சாகர் மாவட்ட நிர்வாகம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது. மேலும், தடுப்பூசி பொருள்களை காலையில் பொறுப்பிலிருந்த மாவட்ட நோய்த்தடுப்பு அலுவலர் டாக்டர் ராகேஷ் ரோஷன் மீதும் துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு – WHO

எச்.ஐ.வி பரவத் தொடங்கியதிலிருந்து, 1990 முதல் ஒருமுறை பயன்படுத்துவதற்கான டிஸ்போசிபிள் சிரிஞ்ச்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு உட்பட சர்வதேச நிறுவனங்களும் இதையே அறிவுறுத்துகின்றன. 2021, ஜனவரியில் இந்திய முழுவதும் தடுப்பூசி போடும் தொடங்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் `ஒரு ஊசி, ஒரு முறை’ என்ற நெறிமுறையை வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.