75வது சுதந்திர தினம்: பெங்களூரு Lal Bagh-ல் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள லால் பாக் தாவரவியல் பூங்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இது மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. இங்கு கண்ணாடி குடில், எழில்மிகு ஏரி, திருவக்கரை கல் மரம், மீன் தொட்டி, கெம்பகவுடா கோபுரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும் மலர் கண்காட்சி மிகவும் புகழ் வாய்ந்தது. கர்நாடகா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிவர்.

அந்த வகையில் நடப்பாண்டு சுதந்திர தினம் சிறப்புக்குரியது. ஏனெனில் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இதையொட்டி லால் பாக் பூங்காவில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு புதிய வரவுகளும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டு மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தோட்டக்கலைத் துறை மற்றும் மைசூரு தோட்டக்கலைத் துறை சொசைட்டி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால் நடத்தப்படுகிறது.

வரும் 5ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெறவுள்ளன. வெளிநாடுகளில் இருந்து 50 வகையான பூக்கள் வரவுள்ளன. உள்நாட்டை சேர்ந்த 60 வகையான பூக்களும் இடம்பெறுகின்றன. குறிப்பாக கன்னட நடிகர்கள் ராஜ்குமார், அவரது மகன் புனீத் ராஜ்குமார் ஆகியோரின் உருவச்சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அமைக்கப்பட உள்ளன.

மேலும் சில முன்னணி நடிகர்களின் சிலைகளும் இடம்பெறவுள்ளன. இதுதவிர மணல் சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. லால் பாக் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க வார நாட்களில் 80 ரூபாயும், வார இறுதி நாட்களில் 100 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எல்லா நாட்களிலும் 30 ரூபாய் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

அதுமட்டுமின்றி முதலுதவி மையங்கள், அலர்ஜி சேவை மையங்கள் உள்ளிட்டவை முதல்முறை அமையவுள்ளன. 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்காவில் மூன்று இடங்களில் மட்டும் தேன் கூடுகள் இருக்கின்றன. அவற்றை நீக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மேலும் ஆக்ரோஷமான நாய்களை கண்டறிந்து உரிய மருந்துகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரத்த தான முகாம்கள், கண் பரிசோதனை முகாம்களும் அமைக்கப்படவுள்ளன. லால் பாக் மலர் கண்காட்சியை காண வருவோருக்காக பொதுப் போக்குவரத்து வசதிகள், பார்க்கிங் வசதிகள் செய்து தரப்பட உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.