2024 நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து திறக்கப்பட உள்ளதா அயோத்தி ராமர் கோயில் ..?

லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பக்தர்களுக்காக சன்னதி திறக்கப்படும் என தகவல் வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், 40 சதவீத கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக கட்டுமான தளத்தின் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். கோவிலின் முதல் தளம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கோவில் கட்டுமான வேலை வேகமாக நடந்து வருகிறது. நாங்கள் ஒரே நேரத்தில் ‘கர்ப்ப கிரகம்’ எனும் கருவறை பகுதியில் இருந்து கோவிலை கட்டத் தொடங்கினோம். ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட இளஞ்சிவப்பு மணற்கல் கோவில் சுவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது,” ராம் ஜென்மபூமி அறக்கட்டளையில் பணியமர்த்தப்பட்ட 5 மேற்பார்வை தலைமை பொறியாளர்களில் ஒருவர், கட்டுமான தளம் பற்றி விளக்கமாக கூறினார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல் கல்லை வைத்து, ‘கர்ப கிரகம்’ எனப்படும் கோவிலின் கருவறைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்றார். எதிர்வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பக்தர்களுக்காக சன்னதி திறக்கப்படும். இதில் பாஜக அரசியல் ஆதாயத்தை எதிர்பார்க்கும்.

500 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வரும் நிலையில், அந்த போராட்டம் தற்போது ஒரு முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எந்த ஒரு இந்தியனுக்கும் இதைவிட பெருமையான தருணம் இருக்க முடியாது. அந்நிய படையெடுப்பாளர்கள் நம் கலாச்சாரத்தை தாக்கினர், ஆனால் இறுதியில் இந்தியா வென்றது,” என்று முதல்வர் ஆதியோகியநாத் கூறியுள்ளார்.

கோயில் கட்டுமான பணியில் உள்ள ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் அறிக்கையில், கருவறையில் ராஜஸ்தானின் மக்ரானா மலைகளில் இருந்து வெள்ளை மார்பிள்கள் பயன்படுத்தப்படும் என்று கூறினர். கோயில் திட்டத்திற்கு 8 முதல் 9 லட்சம் கன அடி செதுக்கப்பட்ட மணற்கல், 6.37 லட்சம் கன அடி செதுக்கப்படாத கிரானைட், 4.70 லட்சம் கன அடி செதுக்கப்பட்ட இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் 13,300 கன அடி மக்ரானா வெள்ளை செதுக்கப்பட்ட பளிங்கு ஆகியவை கொண்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2020 இல் ‘பூமி பூஜை’ யாக கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார், அதன் பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவே உற்றுநோக்கும் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கின்ற நேரத்தில் அயோத்தியில் கட்டப்பட்டு வருகின்ற ராமர் கோயில் திறக்கப்படுவது இந்திய அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்க்க செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.