ஊழல் லிஸ்டில் அடுத்த அமைச்சர்… பகீர் கிளப்பிய அண்ணாமலை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சிறை செல்வது உறுதி. ஏனெனில் மின்சாரத்துறை, மதுவிலக்கு துறை என பல்வேறு அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அண்ணன் நாசரை பொறுத்தவரை வாயைத் திறந்து அவரே ஊழல் குற்றசாட்டை சொல்லி விடுவார். நாமே வேண்டாம் என்று நினைத்தாலும் புதிது, புதிதாக ஊழல் குற்றச்சாட்டுகளை அவரே தேடித் தேடி நமக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவர் அமைச்சராக இருப்பது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய துரதிஷ்டவசமானது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதையடுத்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, காஷ்மீரில் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பாஜக தொண்டர்கள் சென்றுள்ளனர். அப்போது பாஜகவினரை அங்கிருந்து வெளியேறுமாறு அமைச்சர் கூறியுள்ளார். பாஜகவினர் அஞ்சலி செலுத்த தகுதியற்றவர் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

நாங்கள் வன்முறையை கையில் எடுக்கும் கட்சி அல்ல. கட்சியினரோ அல்லது பொதுமக்களோ அப்படி செய்தால், அதை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துவோம். முதலில் பாஜகவினரை அங்கு நிற்கக் கூடாது என்று சொன்ன அமைச்சர் பதவி விலக வேண்டும். எதற்காக அமைச்சர் அப்படி பேசினார் என்று முதல்வர் கேட்க வேண்டும் என்றார். தற்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் ஆதாரத்துடன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாரும் தயாராக இல்லை. குறிப்பாக அமைச்சர்கள் தங்கள் துறையில் நடைபெறும் பணிகள் குறித்து அவர்களுக்கே நம்பிக்கை இல்லை.

மக்கள் மன்றத்தில் பேச எந்தவொரு விஷயமும் இல்லை. தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர். அந்த கோபத்தின் வெளிப்பாடாகத் தான் இதைப் பார்க்கிறேன் எனக் கூறினார். தொடர்ந்து பேசுகையில், இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களுக்கும் சேர்த்து பாஜக சேவை செய்து கொண்டிருக்கிறது. இதுபற்றி ப.சிதம்பரம் அவர்களுக்கு புரிந்தாலும் புரியாதது போல் தான் பேசுவார். பாஜக எந்த ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனத்தையும் விற்கவில்லை.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது, லாபகரமாக இயங்கிய பல மத்திய அரசு நிறுவனங்களை நஷ்டமாக்கிய பெருமை அவரையே சேரும். காரைக்குடி முன்னாள் நிதி அமைச்சரின் தொகுதி போல் இருக்கிறதா? என்னென்ன தொழிற்சாலைகள் வந்துள்ளன? பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றனவா? எனவே நாட்டை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு ஒரு குடும்பத்திற்கு எப்படி சேவை செய்து வருகிறாரோ அதை செய்தால் போதுமானது என்று அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.