அண்ணாமலை ஆபரேஷன் 2026… அர்ஜுனமூர்த்தி போடும் மாஸ்டர் பிளான்!

தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி. இவரது அரசியல் அறிவு குறித்து அறிந்து வியந்த நடிகர் ரஜினி, 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் புதிதாக கட்சி தொடங்குவதாக முடிவெடுத்திருந்த நிலையில், தமிழருவி மணியனுடன் சேர்த்து அர்ஜுனமூர்த்தியை தன் அருகில் வைத்து கொண்டார். அத்துடன் இ ஆரம்பிக்கப்படாத தமது கட்சிக்கு அர்ஜுனமூர்த்தியை ஒருங்கிணைப்பாளராக அறிவித்து அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் ரஜினி.

சரி இவ்வளவு தூரம் வந்துட்டாரே… அப்போ 2021 தேர்தலில் தரமான சம்பவம நிச்சயம் இருக்கு என்று அர்ஜூனமூர்த்தி தொடங்கி லட்சக்கணக்கான ரசிகர்கள் வரை புதிய கட்சி தொடங்குவது குறித்த ரஜினியின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், கொரோனாவை காரணங்காட்டி தீவிர அரசியலில் இறங்குவதை கைவிடுவதாகக் கூறி ஜெகா வாங்கினார் சூப்பர் ஸ்டார்.

இதனால் அவரது ரசிகர்களை போல அப்ஜெட்டான அர்ஜூனமூர்த்தி ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ என்ற அட்ரஸ் தெரியாத கட்சியில் சிறிது காலம் இருந்துவிட்டு, தற்போது மீண்டும் தாய் கட்சியான பாஜகவுக்கே திரும்பி உள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 எம்பி தொகுதிகளை கைப்பற்றுவது, 2026 இல் தமிழ்நாட்டில் தாமரையின் ஆட்சியை மலர செய்வது என, ஏற்கெனவே மிகப்பெரிய இலக்குகளுடன் பாஜக பம்பரமாய் சுழன்று கொண்டிருக்க, தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க, தம்மாலான அனைத்து முயற்சிகளையும் முனைப்பாக செய்து வருகிறாராம் அக்கட்சியின் மாஸ்டர் மையின்ட் அர்ஜுனமூர்த்தி.

இவற்றில் முக்கியமாக, விரைவில் கலைக்கப்படவுள்ள ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’யின் நிர்வாகிகள், தொண்டர்களை பாஜகவில் இணைய வைப்பது…ரஜினி காட்டிய அரசியல் ஆசையால் மோசம் போய்வுள்ள அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாஜக பக்கம் இழுப்பது என்று கட்சியை பலப்படுத்தும் பணிகளை சைலண்டாக செய்து வருகிறாராம் பாஜகவின் திங் டாங்க் அர்ஜூனமூர்த்தி.

மீண்டும் தீவிர அரசியலில் இறங்கும் எண்ணம் இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான தமது சமீபத்திய சந்திப்பிற்கு பிறகு ரஜினி தெளிவுப்படுத்திவிட்டநிலையிலும்,. அவரை சும்மா விடுவதாக இல்லை பாஜக. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் ஆவது கொடுக்க வேண்டுமென விரும்புகிறதாம் பாஜக மேலிடம். அப்படி அவர் வாய்ஸ் கொடுத்தால், அதற்கு கைமாறாக அவருக்கு ஆளுநர் பதவி அளிக்கப்படும் என்றும் ரஜினிக்கு பாஜக ஆசைக்கட்டி உள்ளதாம்.

பாஜகவின் இந்த டீலுக்கு ரஜினி ஓகே சொல்லி, 2026 தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டு, தமிழகத்தில் தாமரை ஆட்சி மலரும் அதிசயம் நிகழ்ந்தால், கட்சியின் மாநிலத் தலைவர் ஆகும் வாய்ப்பு அர்ஜுனமூர்த்திக்கு இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் இப்போதே ஆருடம் கூறப்படுகிறது.

காரணம், நயினார் நாகேந்திரன், வி.பி. துரைசாமி என தமிழக பாஜகவில் பல துணைத் தலைவர்கள் இருந்தாலும், கட்சியில் டெல்லி வரை செல்வாக்குள்ள நபராக தம்மை நிலைநிறுத்தி கொண்டுள்ளாராம் அர்ஜுனமூர்த்தி. அண்ணாமலை ஆபரேஷன் 2026 வெற்றி பெறுமா, தமிழக பாஜக தலைவர் ஆவாரா அர்ஜுனமூர்த்தி? யார் கண்டது…அரசியலில் எதுவும் நடக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.