“முடியவில்லை, ஊருக்கே வந்துவிடுகிறேன்!" – திருவாரூரிலிருந்து குவைத்துக்குச் சென்றவர் சுட்டுக்கொலை?

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லட்சுமண்குடி கிராமத்தில் வசித்து வந்தவர் முத்துகுமரன். இவருக்கு வித்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். பி.பார்ம் பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த நிலையில், கொரோனா காலத்தில் வேலையை இழந்ததால், காய்கறி வியாபாரம் உள்ளிட்ட சுய தொழில்கள் செய்திருக்கிறார். ஆனால், எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால், முத்துகுமரன் குடும்பத்தினர் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்திருக்கிறார்கள். குழந்தைகளின் படிப்புச் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி இருக்கிறார்கள்.

குவைத் அரசு

இந்த நிலையில்தான், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு ஏஜென்சி மூலமாக குவைத்துக்குச் செல்லும் முயற்சியில் இறங்கிய முத்துகுமரன், இதற்காக தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். கடந்த 3 -ம் தேதி குவைத்துக்குச் சென்ற முத்துகுமரன் அடுத்த மூன்று நாள்கள் தொலைபேசியில் தன்னுடைய குடும்பத்தினருடன் மிகுந்த மனஉளைச்சலோடு பேசியதாகச் சொல்லப்படுகிறது. “குவைத்தில் வேலைப் பார்க்க பிடிக்கவில்லை… மீண்டும் ஊருக்கே வந்துவிடுகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார். அதற்கு பிறகு முத்துகுமரனிடமிருந்து, திருவாரூரில் உள்ள அவர் குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்புகள் வரவில்லை. முத்துகுமரனின் மனைவி அவரை தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது, இந்த நிலையில்தான், முத்துகுமரன் இறந்துவிட்டதாக அவர் மனைவிக்கு வித்யாவுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

மரணம்

குவைத்தில் உள்ள சபா அல் அகமது சிட்டி என்ற பகுதியில் வசிக்கும் அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெரும் கோடீஸ்வரரிடம் உள்ள ஒட்டகங்களை மேய்க்கும் பணியில் முத்துகுமரன் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஒட்டகம் மேய்ப்பதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதனால் அந்த கோடீஸ்வரருக்கும் முத்துகுமரனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அந்த கோடீஸ்வரர் குறித்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முறையிட முத்துகுமரன் முயற்சி செய்திருக்கிறார். அதில் ஆத்திரமடைந்த அந்த நபர், முத்துகுமரனை அடித்து, உதைத்து சித்ரவதை செய்ததோடு, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக்கொலைசெய்ததாக, குவைத்தில் வெளியாகும் `ஐமன் மேட் நியூஸ்’ என்ற பத்திரிகையில் செய்தி வெளியாகியிருக்கிறது. இது குறித்து உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்த நிலையில் முத்துகுமரனின் மனைவி வித்யா, சட்டப்பூர்வ நடவடிக்கை கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காய்த்ரி கிருஷ்ணனிடம் இது தொடர்பாக மனு அளித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.