ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி… மேல்முறையீடு செய்க – சீமான் ஐடியா

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் அணிவகுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் அக்டோபர் இரண்டாம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் தமிழ்நாட்டில் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. அணிவகுப்பு நடத்துவதற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி  உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்புக்கு தமிழ்நாட்டில் பலரது மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆளுங்கட்சியான திமுகவையும் பலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காந்தி ஜெயந்தியன்று, அவரது படுகொலைக்காகத் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். எனும் மதவாத இயக்கத்தின் பேரணிக்கு மாநிலத்தின் 50 இடங்களில் அனுமதி அளித்திருப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல!

 

மதப்பூசல்களை அனுமதியாது எப்போது அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கும் முடிவானது மிகத்தவறான முன்னுதாரணமாகும். மக்கள் நலனென்பது துளியுமற்று, மதவாத அரசியலையும், பிரித்தாளும் சூழ்ச்சியையும் கையிலெடுத்து, நாட்டைத் துண்டாடி அதன்மூலம் அரசியல் இலாபமீட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணியை தமிழக மண்ணில் அனுமதிப்பதென்பது மத நல்லிணக்கத்துக்கும், சமூக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் பேராபத்தாகும்.

ஆகவே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.