தமிழகம் முழுவதும் கோ-அப்டெக்ஸ் நிறுவனம் சார்ந்த 150 ஜவுளி கடைகள்!
தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனதின் தீபாவளி சிறப்பு விற்பனை மற்றும் விற்பனை வளாகத்தை அமைச்சர் காந்தி இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். விற்பனையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி பேசியதாவது ” பொதுவாக தீபாவளி முன்னிட்டு 30% தள்ளுபடி உடன் ஆடைகள் விற்பனை செய்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் விற்பனையை தொடங்கி வைக்க வந்துள்ளேன். தமிழகம் முழுவதும் கோ-அப்டெக்ஸ் நிறுவனம் சார்ந்த 150 ஜவுளி கடைகள் உள்ளன. அனைத்து கடைகளிலும் தீபாவளிக்கு முன்னிட்டு 30% தள்ளுபடியுடன் ஆடைகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

பட்டுகள் மற்றும் ஜவுளித்துறை தீபாவளிக்கு ரூ.125 கோடிக்கு விற்பனையை இலக்காக நிர்ணயத்து உள்ளோம். மேலும் இதுவரை இல்லாத வகையில் இந்த தீபாவளிக்கு 500 புதிய ரக பட்டு புடவை வகைகள் அறிமுகம் செய்துள்ளோம். அதில் இரிடேஸ் கலெக்ஷன், அவார்ட் வின்னிங் கலெக்ஷன், சிக்னேச்சர் கலெக்ஷன், சோஜா கலெக்ஷன் என பல்வேறு பிரிவுகளில் புதிய ரக புடவைகள் கோ-ஆப்டெக்ஸ் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழக முழுவதும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம், கோஆப்டெக்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஊட்டியில் உள்ள தோடர் பழங்குடியின மக்கள் தயாரிக்கும் ஆடைகளையும் விற்பனை செய்ய பழங்குடியின ஆடைகள் விற்பனை நிலையம் என பல்வேறு பிரிவுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸில் விற்பனை செய்யப்படும் அனைத்து புடவைகளுக்கும் தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு புடவை வாங்கினால் அதை மீண்டும் கோ ஆப் டெக்ஸில் திரும்ப விற்பனை செய்தால் அதை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக் கொள்வோம். அதன் மதிப்பு கூடுமே தவிர குறையாது. அந்த அளவிற்கு கோ-ஆப்டெக்ஸியில் விற்பனை செய்யப்படும் பட்டு புடவைகள் தரம் குறையாமல் தயாரிக்கப்படுகிறது. புடவையில் உபயோகிக்கப்படும் அனைத்து ஜரிகைகளும் தரமானதாகவும் தூய்மையாகவும் பயன்படுத்தப்படுவதால் அதன் மதிப்பு கூடுமே தவிர என்றுமே குறையாது என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.