தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விவகாரம்: தேர்தல் ஆணையர் விளக்கம்

புதுடெல்லி,

தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றுவது தொடர்பான பரிந்துரைக்கு அரசியல் கட்சிகளின் பதிலுக்காக காத்திருப்பதாக தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

இமாசல பிரதேச தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், பின்னர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குறுதி வழங்க மறுக்கமுடியாத உரிமை உள்ளது. அதை எப்படி நிறைவேற்றுவார்கள் என்பதை அறிய வாக்காளர்களுக்கும் உரிமை உண்டு.எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எப்படி? என சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் விளக்குவது தொடர்பாக விதிமுறை ஒன்றை உருவாக்கி அதை தேர்தல் நடத்தை விதிகளில் சேர்க்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.

இது தொடர்பான பரிந்துரை ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பதிலை அரசியல் கட்சிகள் வருகிற 19-ந்தேதிக்குள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.எனவே அரசியல் கட்சிகளின் பதிலுக்காக காத்திருக்கிேறாம். அவை கிடைத்தவுடன் இதுகுறித்து முடிவு செய்யப்படும்.

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் உள்ளிட்ட இலவசங்கள் வழங்குவதை ஏற்க முடியாது. எனவே இவற்றை தடுக்க அனைத்து விசாரணை அமைப்புகளும் உஷார்படுத்தப்பட்டு இருக்கின்றன.வாக்களிக்க தவறிய வாக்காளர்களை அடுத்த முறை வாக்களிக்க செய்வதற்கு ஊக்கப்படுத்தும் பிரசாரம் ஒன்று தொடங்கப்படும். அந்தவகையில் நகர்ப்புற வாக்காளர்களின் அக்கறையற்ற தன்மை தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும்.

இதற்காக 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அமைப்புகளில் சிறப்பு அதிகாரி ஒருவரை ஏற்படுத்த பணிக்கப்படும்.வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்களிக்காத வாக்காளர்களை இவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து, தயவு செய்து அடுத்த முறை ஓட்டளியுங்கள் என வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுவும் ஒருவிதமான விழிப்புணர்வுதான்.இதைப்போல கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.