புதுடெல்லி: அடுத்தாண்டு முதல் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு புதிய டோல் கட்டணம் முறை அமல்படுத்த ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, வாகனங்களில் பொருத்தப்படும் தானியங்கி நம்பர் பிளேட்கள் மூலம் பணம் வசூலிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கான சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக சுங்கக் கட்டணம் வசூலிப்பு முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வர ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அடுத்தாண்டு (2023) முதல் அமலுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘புதிய விதிமுறைகளின்படி, ஓவர்லோடு ஏற்றிவரும் கனரக வாகனங்கள் கண்காணிக்கப்படும்.
அந்த வாகனங்களால் சாலையில் அதிகளவில் தேய்மானத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சாலையில் உள்கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இத்திட்டத்தின்படி சிறிய அளவிலான எடை குறைந்த வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் ஓட்டினால் குறைந்த கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். அதேநேரம் அதிக சுமையுடன் தொலை தூரத்தில் இருந்து வாகனங்களை ஓட்டிவந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிவரும். அதற்கேற்றால் போல் புதிய கட்டணக் கொள்கை வெளியிடப்படும்.
ஜிபிஎஸ் அடிப்படையிலான புதிய ‘டோல்’ சிஸ்டம் அமல்படுத்த உள்ளதால், வாகனத்தின் திறன், சாலை உள்கட்டமைப்பில் அதன் தாக்கம் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் புதிய கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படும். மேலும் சாலையில் பயணிக்கும் நேரம் மற்றும் கடந்து வந்த தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு வாகனம் சாலையில் எவ்வளவு தூரத்தை கடந்து வந்துள்ளது, எவ்வளவு சுமைகளை எடுத்து வந்தது என்பதின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.