பாக்.,கில் அடுத்த ஆசியக்கோப்பை கிரிக்கெட்: ஜெய் ஷா மறுப்பு| Dinamalar

புதுடில்லி: 2023ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் அசாதாரண சூழல் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று எந்தவொரு போட்டித் தொடரிலும் பங்கேற்கவில்லை.
இரு நாடுகள் இடையிலான போட்டிகள் பாக்., அல்லாத பொதுவான இடத்தில் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அடுத்தாண்டு (2023) ஆசிய கோப்பை தொடரும், 2025ல் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடரும் பாகிஸ்தானில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய அணி பாக்., செல்லாது எனவும், பொதுவான இடத்தில் போட்டிகள் நடைபெறும் எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செயலாளராக ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று (அக்.,18) நடைபெற்ற பிசிசிஐ 91வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஜெய் ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛2023 ஆசிய கோப்பை தொடரை நடுநிலையான பொதுவான இடத்தில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அது முடிவு செய்யப்பட்டதும் நாங்கள் அதைப் பற்றி கருத்து தெரிவிப்போம்’ என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.