நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பலரும் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் தங்களது தீபாவளி கொண்டாட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் பட்டாசு வெடிக்கும்போது அனைவரும் பாதுகாப்போடு வெடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி பட்டாசு வெடிப்பதற்கும் பல வகுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தீபாவளி பண்டிகைக்கு மக்களுக்கு குடியரசு தலைவர் முதல் அரசியல் தலைவர்கள்வரை தங்களது வாழ்த்து செய்தியை கூறிவருகின்றனர்.
அந்தவகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டிருக்கும் தீபாவளி வாழ்த்து செய்தியில், “தீபாவளி, ஒரு மகிழ்ச்சியான பண்டிகை. தீபாவளி நாளில், மக்கள் தங்கள் ீவீடுகளில் லட்சுமியை வழிபட்டு, ஒவ்வொருவரின் மகிழ்ச்சிக்கும், வளமைக்கும் வேண்டிக் கொள்வார்கள். பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்க உணர்வை மேலும் வலுப்படுத்துவதற்கான தருணம்தான் தீபாவளி பண்டிகை. நம் உள்ளும், புறமும் உள்ள அறியாமை இருளை அகற்றும் ஞானத்தை தீபாவளி ஒளி குறிக்கிறது.
இந்த மங்களகரமான நாளில், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விளக்கு போல், நமது வாழ்க்கையில் ஒளியும், ஆற்றலும் பரவட்டும். நலிந்தோருக்கு உதவும் உணர்வு, மக்களின் மனதில் ஆழ்ந்து வளரட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.