இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சிறுநீரகம் பாதித்த சிறுவனை தமிழகம் அழைத்து வர ஏற்பாடு: 14 மீனவர்கள் சிறையில் அடைப்பு

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கைது செய்த 14 வயது சிறுவனை தமிழகம் அழைத்து வர இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீதமுள்ள 14 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 5ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களில் தங்கச்சிமடத்தை சேர்ந்த சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனும் உள்ளார்.  

கைதான மீனவர்கள் தலைமன்னார் பொறுப்பு நீதிபதி முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். 14 மீனவர்களையும், வரும் 17ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி  உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் 14 பேரும் வவுனியா சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனை,  பேசாலை என்ற இடத்தில், இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புடன், அங்குள்ள ஒருவர் வீட்டில் தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுவனை மட்டும் தமிழகம் அனுப்ப தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

* விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையினர் கைது செய்த மீனவர்கள் விடுதலையை வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் பெரிய விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் நேற்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 400க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் கரை நிறுத்தப்பட்டுள்ளன. சிறிய விசைப்படகு மீனவர்கள் மட்டும் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கைதான மீனவர்களை விடுதலை செய்யக்கோரி,  தங்கச்சிமடத்தில் மீனவர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.