சிறை வாசம் முடிந்தது… 30 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ”கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்” என்று தீர்ப்பளித்தது. 

பரோலில் உள்ள நளினிக்கு விடுதலை தொடர்பான உத்தரவு நகல் கிடைத்தது. பரோலில் இருந்த நளினியை சிறைக்கு அழைத்துச் சென்று, விடுதலைக்கான நடைமுறைகளை சிறைத்துறை செயல்படுத்தியது சிறைத்துறை. 

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து நளினி விடுதலை ஆனார்.நளினியைத் தொடர்ந்து  முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் சிறை நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை ஆகினர். 31 ஆண்டுகள் கழித்து தன் மகள் விடுதலையாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என நளினியின் தாயார் பத்மா தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்ட முருகன், ராபர்ட், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் திருச்சியில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த மே 18ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.