பாட்னா: பீகார் மாநிலம் பத்த நயா தோலா பகுதியைச் சேர்ந்த சுஜித் குமார் (21) என்பவர், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ரேகா குமாரி (19) என்பவரை காதலித்து வந்தார். இந்த விஷயம் ரேகா குமாரியின் வீட்டிற்கு தெரியவந்தது. அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேகா குமாரிக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைத்தனர். இருந்தும் ரேகா குமாரியின் மனம் தன்னுடைய காதலன் சுஜித் குமாருடன் இருந்தது.
இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் தனது காதலனை சந்திப்பதற்காக தனது கணவர் மற்றும் மாமியாரிடம் சாக்குப்போக்கு காரணங்களை கூறி ரேகா வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் தனது காதலன் வசிக்கும் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அன்றிரவு காதலன் சுஜித் குமாருடன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
இருவரும் பேசிக் கொண்டிருப்பதை, அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவர்களை பார்த்த அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்று இரவோடு இரவாக திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருவரும் பிடிபட்ட போது, இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புவதாகவும், தாங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கிராம மக்களிடம் கூறினர். அதனால் இருவருக்கும் கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் ஏற்கனவே ரேகா குமாரியை திருமணம் செய்து கொண்டவர், இதுவரை போலீசில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.