சபரிமலையில் ஒரு சுமை அனுபவம்| Dinamalar

சபரிமலை: எறும்பு அரிசியை இழுத்து செல்வது போல் டிராக்டரும், ரோடும் இல்லாத காலத்தில் அரவணை இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை சபரிமலை சன்னிதானம் கொண்டு சென்றதாக
அங்கு 40 ஆண்டுகளாக சுமை துாக்கும் தொழிலாளி ஆர்.செல்வன் 58, தெரிவித்தார்.

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியை சேர்ந்த செல்வன் சுமை தொழிலாளியாக சபரிமலையில் பணிபுரிந்து வருகிறார். தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:18 வயது முதல் சபரிமலையில் சுமை துாக்கும் வேலை செய்கிறேன். சபரிமலை நடை எப்போது திறந்தாலும் நானும் இருப்பேன். பல விதமான சுமைகளை சன்னிதானத்தில் கொண்டு சேர்த்துள்ளேன். சிலர் பேரம் பேசுவர். சிலர் பேசுவதை விட அதிகமாக தருவர். ஆனால் ஐயப்பனுக்கு சேவை செய்ததாக கருதுவதால் ஆத்மதிருப்தி கிடைக்கிறது.

இருபதாண்டுகளுக்கு முன் அரவணை பிரசாதத்தை பேக்கிங் செய்வதற்கான இயந்திரம் பம்பை வந்தது. அதை எப்படி கொண்டு செல்வது என்பது சவாலாக இருந்தது. 30 பேர் சேர்ந்து தள்ளுவண்டியில் துாக்கி வைத்து பயணத்தை துவங்கினோம். இன்று கான்கிரீட் ரோடாக இருக்கும் சுவாமி ஐயப்பன் ரோடு அன்று குண்டும் குழியுமாக இருந்தது, பாதி துாரம் சென்ற போது ரோட்டில் பள்ளத்தில் சக்கரம் புதைந்தது. எப்படி தள்ளினாலும் அது நகரவில்லை.
பின் ஒரு டிராக்டரின் முன்பக்க பெட்டியை கழற்றி விட்டு அதில் கட்டி இழுத்து சன்னிதானம் சேர்ந்தோம். காலையில் புறப்பட்டு இரவில் தான் சன்னிதானம் வர முடிந்தது.

சன்னிதானத்தில் உள்ள நெய் தோணியை 20 பேர் சேர்ந்து இரண்டு நாட்களில் கொண்டு சேர்த்தோம். மின்வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட பல பொருட்களும் இப்படிதான் கொண்டு செல்லப்பட்டது. பண்டைய காலத்தில் கட்டடம் கட்டுவதற்கு தேவையான செங்கல், மணல், சிமென்ட் போன்றவை கழுதை மீது கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கம்பி அப்படி கொண்டு போக முடியாது.

நாங்கள் சுமந்து செல்வோம். ஒரு சுமையில் 50 கிலோ கம்பி கொண்டு செல்வோம். அன்று கூலி 12 ரூபாய் ஐம்பது பைசா. ஒரு நாள் மூன்று முறை மட்டுமே சுமை துாக்கி சென்ற வர முடியும். இப்படி எறும்பு அரிசியை இழுத்து செல்வது போல் எங்களை போன்ற தொழிலாளர்கள் சுமந்தும், இழுத்தும் சென்றதுதான் இன்று பல கட்டடங்களாக சன்னிதானத்தில் கம்பீரமாக நிற்கிறது.
இன்று ஏராளமான டிராக்டர்கள் வந்து விட்டது. சுமையும் குறைந்து விட்டது. வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை சுவாமி ஐயப்பன் தருகிறார். டோலியில் நான்கு பேரில் ஒருவர் குறைந்தால் என்னை அழைப்பர். அதற்கும் தோள் கொடுப்பேன்.
2007ல் பம்பை – சாலக்கயம் ரோட்டில் வேலை செய்த போது ஒரு பாறைக்கு அடியில் காய்ந்து கிடந்த தடியை இழுத்த போது பாறை உருண்டு விழுந்து வலது கை நைந்தது. கோட்டயம் மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைக்கு பின் கை துண்டிக்கப்பட்டது. குணமடைந்த பின் மீண்டும் கடந்த 15 ஆண்டுகளாக சபரிமலையில் இச்சேவையில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.