கிழக்கு டெல்லி மாநகராட்சி ( EDMC), டெல்லி மாநகராட்சி (MCD) தெற்கு டெல்லி மாநகராட்சி(SDMC) ஆகிய மூன்று மாநகராட்சிகளுக்கான தேர்தல் 2017-ல் நடத்தப்பட்டன. அதன் பிறகு டெல்லியில் மூன்றாக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன் அடிப்படையில், கடந்த 4-ம் தேதி தேர்தல் நடைப்பெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டியில் நிலவியது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 250 வார்டுக்கும் சேர்த்து 50% வாக்குகள் பதிவாகியது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று டெல்லி மாநகராட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
டெல்லி மாநகராட்சியில் அதிகாரத்தை கைப்பற்ற 126 இடங்கள் தேவை. இந்நிலையில், மதியம் 1.15 மணியளவில், ஆம் ஆத்மி கட்சி 250 வார்டுகளில் 133 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றது. ஆரம்பத்தில் பல முறை ஆம் ஆத்மியை பின்னுக்குத் தள்ளிய பா.ஜ.க, இப்போது 104 வார்டுகளில் முன்னிலைப் பெற்றிருக்கிறது. 218 வார்டு முடிவுகளில் ஆம் ஆத்மி 113, பா.ஜ.க 96, காங்கிரஸ் 7, சுயேட்சைகளுக்கு இரண்டு என்றளவில் வெற்றிப் பெற்றிருக்கின்றன. பாஜக, ஆம் ஆத்மி இடையேயான போட்டியில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.
இந்த முறை ஆம் ஆத்மி கட்சி தான் டெல்லி மாநகராட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பின்னான கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் சொல்லியது குறிப்பித்தக்கது.