குஜராத் தேர்தல் முடிவுகள் 2022: சொல்லி அடிக்குமா பாஜக? காங்கிரஸை ஓடவிடுமா ஆம் ஆத்மி?

குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. முதலில் தபால் வாக்குகள், அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என்று கூறிவிட்டன. அரசியல் விமர்சகர்களின் பார்வையிலும் பாஜகவே முன்னிலையில் இருக்கிறது.

பெரும்பான்மை தொகுதிகள்

இந்த சூழலில் எத்தனை இடங்கள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெறப் போகிறது என்பது தான் முக்கிய கேள்வியாக முன்வந்து நிற்கிறது. குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் 92 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சிக் கட்டிலில் அமரும். இந்நிலையில் பாஜக 182 தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிட்டுள்ளது.

எத்தனை இடங்களில் போட்டி?

காங்கிரஸ்
179, தேசியவாத காங்கிரஸ் 2, ஆம் ஆத்மி கட்சி 180, பாரதிய பழங்குடியின கட்சி 26, ஏஐஎம்ஐம் கட்சி 13, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9, பகுஜன் சமாஜ் 101, சமாஜ்வாதி கட்சி 17 இடங்களில் போட்டியிட்டுள்ளன. பாஜக வழக்கம் போல் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு தொடர்ந்து 7வது முறையாக ஆட்சியை பிடித்து மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின் சாதனையை சமன்செய்ய வியூகம் வகுத்து செயல்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி எழுச்சி பெறுமா?

கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் 61 தொகுதிகளில் வென்று 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் எழுச்சி கண்டது. இம்முறை அடுத்தகட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸின் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் ஆம் ஆத்மி கட்சியிடம் எதிர்க்கட்சி அந்தஸ்தை பறிகொடுக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. பாஜகவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கான பலன் இன்று தெரிந்து விடும்.

மீண்டும் மும்முனை போட்டி

இதற்கு முன்பு 1990ஆம் ஆண்டு மும்முனை போட்டியை குஜராத் மாநிலம் எதிர்கொண்டது. அப்போது ஜனதா தளம் 70, பாஜக 67, காங்கிரஸ் 33 இடங்களில் வெற்றி பெற்றன. அதாவது காங்கிரஸின் இடத்தை ஜனதா தளமும், பாஜகவும் கைப்பற்றின. இதற்கு சிறப்பான கூட்டணி, தொகுதி பங்கீட்டில் வியூகம் வகுத்து செயல்பட்டது, இந்துத்துவாவின் எழுச்சி ஆகியவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

பாஜகவின் ஆதிக்கம்

அதன்பிறகு பாஜகவின் ஆதிக்கத்தை குஜராத் மாநிலத்தில் யாராலும் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. தொடர்ந்து அக்கட்சியே ஆட்சிக் கட்டிலில் இருந்து வந்தது. தேர்தல் களத்தை பொறுத்தவரை இருமுனைப் போட்டியாகவே காணப்பட்டது. இந்த சூழலில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு மும்முனை போட்டிக்கு குஜராத் மாநிலம் தயாராகி இருக்கிறது.

மக்களவை தேர்தலுக்கு அச்சாரம்

அடுத்து 2024 மக்களவை தேர்தல் தான் தேசிய அளவில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதற்கு சட்டமன்ற தேர்தல்களில் பெறும் வெற்றி என்பது மிக மிக அவசியமானது. அந்த வகையில் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் மக்களவை தேர்தலுக்கு அச்சாரம் போடும் வகையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.