தகுதியுள்ள பயனாளிகளுக்கு பலன்கள் சென்றடைய வேண்டும்: சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு உதயநிதி அறிவுரை

சென்னை: தகவல் தொழில்நுட்ப முன்னெடுப்புகளை சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு அறிவிக்கும் பலன்கள் சென்று சேருவதை சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை மேலும் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.17) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

ஆளுநர் உரை, 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் வெளியிடப்பட்ட இதர அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தின்போது அமைச்சரால் அறிவிப்புகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலமாக ஆணை வெளியிடப்பட்ட விவரங்கள் மற்றும் அவற்றின் செயலாக்கத்தினை இத்துறை கண்காணிக்கும் முறை பற்றியும், துறைவாரியாக 2021-22, 2022-23ஆம் ஆண்டுகளில் இதுவரை வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு ஆணை வெளியிடப்பட்ட விவரங்கள் பற்றியும் அமைச்சருக்கு விரிவரிக்கப்பட்டது.

மேலும், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’, ‘நான் முதல்வன்’ திட்டம், ‘தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்’ ஆகியவற்றின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் துறையினால் எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக அரசு நிர்வாகத்தில் தரவு சார்ந்த மேலாண்மையின் பயனாக அரசின் திட்டங்கள் தகுதியுள்ள பயானளிகளை சென்றடைவதை உறுதி செய்யும் நடைமுறைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதன்பிறகு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் கள ஆய்வு அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஆய்வறிக்கைகளை இத்துறை உரிய முறையில் தொகுத்து சம்மந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து அதன் அடிப்படையில் திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மேலும், மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டங்களின் முன்னேற்றத்தைக் குறித்தும் அத்திட்டங்களினால் மக்களுக்கு ஏற்பட்ட பயன்கள் குறித்தும், இத்திட்டங்களை கண்காணிக்கும் விதம் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அரசின் கண்காணிப்பு அமைப்பாக திறம்பட செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், அறிவிப்புகள் ஆணைகளோடு நின்றுவிடாமல் அவை கடைகோடி மக்களையும் சென்றைடையும் வகையில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை இத்துறை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு சம்பந்தப்பட்ட துறைகளுடன் இத்துறை இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், அரசின் திட்டங்கள் வெற்றியடைய சம்பந்தப்பட்ட துறைகளை இத்துறை சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தகவல் தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு அறிவிக்கும் பலன்கள் சென்று சேர்வதை இத்துறை மேலும் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.