மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று; மரபணு சோதனைக்கு மத்திய அரசு உத்தரவு| Dinamalar

புதுடில்லி: சீனா மற்றும் அமெரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து, புதிய வைரசின் மாறுபாடுகளை கண்டறிய, மரபணு வரிசைமுறையை தீவிரமாக பரிசோதிக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் குவிய துவங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைகளிலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய அளவில் மருந்துகள் இல்லை என, மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன. அரசு, கடும் ஊரடங்கை விலக்கிக் கொண்டதை அடுத்து, நிலைமை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்கா, கிழக்காசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா, தென் அமெரிக்க நாடான பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றன. சீனாவில் தொற்று அதிகரிப்பது, சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அமெரிக்கா, தொற்றில் ஏற்பட்டுள்ள மரபணு மாற்றம் குறித்து, அனைத்து நாடுகளும் எச்சரிக்கையுடன் இருக்க அந்நாடு அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதன் விபரம்:

சீனா உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளதை அடுத்து, நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, புதிதாக தொற்று உறுதியாகும் நபர்களின் மாதிரிகளை, மரபணு வரிசைமுறையை பரிசோதிக்கும், ‘இன்சாகாக்’ சோதனை கூடத்திற்கு அனுப்பி தீவிர பரிசோதனை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த விஷயத்தில் நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் மரபணு மாற்றம் அடைந்த புதிய வகை வைரசை நாம் முன்கூட்டியே கண்டறிந்து, தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட முடியும். இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தொற்றுப் பரவல் அதிகரிப்பை எதிர்கொள்வது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தன் துறை அதிகாரிகளுடன் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.