“மண் மொழி மக்கள் காக்க என் பங்களிப்பு…” – ராகுல் யாத்திரையில் பங்கேற்கும் கமல் விளக்கம்

சென்னை: “மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்” என்று டெல்லியில் நடைபெறும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்பது குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் ராகுல் காந்தி முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், மய்யம் நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து தற்போது டெல்லிக்குள் நுழைந்துள்ளது. இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

சென்னையில் கடந்த வாரம் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பின்னர், நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் மவுரியா, டெல்லியில் வரும் 24-ம் தேதி நடைபெறும் பாரத் ஜோடோ யாத்ராவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்கிறார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்துகொள்கிறோம்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகத்தான் இந்த யாத்திரையில் பங்கேற்கிறோம். இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அவரது கைப்பட எழுதி அழைப்பு விடுத்துள்ளார். இது கூட்டணிக்கானது அல்ல. இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு யாத்திரை என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.