கொரோனா வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! மன்கிபாத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: உலக நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ ரேடியோ நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில், ‘கடந்தாண்டு சிறப்பான ஆண்டாக இருந்தது. இந்தாண்டில் நாட்டின் 75வது சுதந்திரம் தினம் கொண்டாடப்பட்டது. நாடு வேகமாக வளர்ச்சி பெற்றதுடன், உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது. ஜி20 அமைப்பின் தலைமை பதவி இந்தியாவிற்கு கிடைத்தது.

வரலாற்றை போற்றும் காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கல்வி, வெளியுறவு கொள்கை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் புதிய உயரத்தை அடைந்துள்ளோம். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயனளிக்கிறது என்பது மும்பையில் உள்ள டாடா நினைவு மையத்தின் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. சின்னம்மை, போலியோ போன்ற நோய்கள் இந்தியாவில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் உள்ளூர் பொருட்களை பயன்படுத்துவதோடு, பிறருக்கும் பரிசாக வழங்க வேண்டும். தூய்மை கங்கை இயக்கத்தை ஐ.நா உலகின் தலைசிறந்த பத்து சுற்றுச்சூழல் முன்முயற்சிகளில் ஒன்றாக அங்கீகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டு மக்கள் அனைவரது இதயங்களிலும் முன்னாள் பிரதமர் வாஜ்பேயிக்கு முக்கிய இடம் உண்டு. பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் எதிர்வரும் பண்டிகைகளை கொண்டாட வேண்டும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.