சேலம் மாவட்டத்தில் கணவனிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி லட்சுமி (26). இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லட்சுமி மனமுடைந்து நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், லட்சுமியின் தாய் இறந்து விட்டதால், தங்கை மகேஸ்வரி லட்சுமியுடன் வசித்து வந்துள்ளார். இதனால் லட்சுமியின் கணவர் சதீஷ்குமார், மகேஸ்வரியை விடுதியில் சேர்ப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார்.
ஆனால் லட்சுமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதில், மனமடைந்து லட்சுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.