ஆளுநர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்தான்: ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே‌ராஜன் சாடல்!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என பேசினார்.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் ரவி உரையாற்றியபோது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரைக்கு மாறாக சில பத்திகளை நீக்கியும் சிலவற்றை சேர்த்தும் ஆளுநர் ரவி வாசித்தார். தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றிருந்த ’திராவிட மாடல்’ என்ற வார்த்தையையும், ‘அமைதி பூங்கா தமிழ்நாடு’ என்ற வாக்கியத்தையும் குறிப்பிடாமல் ஆளுநர் ரவி தவிர்த்தார்.

தொடக்கத்தில் மட்டும் தமிழ்நாடு என்று கூறிவிட்டு கடைசி கட்டங்களில் தமிழ்நாடு என்று சொல்லாமல் இந்த அரசு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த 65ஆவது பத்தியை வாசிக்காமல் அப்படியே ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய வார்த்தை இடம்பெற்றிருந்தன.

அதுதவிர, பொங்கல் திருவிழாவுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசின் முத்திரையை தவிர்த்துவிட்டு இந்திய அரசின் முத்திரையை பயன்படுத்தியிருந்தார். மேலும், ‘தமிழ்நாடு ஆளுநர்’ என்பதை ‘தமிழக ஆளுநர்’ என குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநரின் இந்த செயல்களுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அரசியலமைப்பு சட்டத்தில் தமிழ்நாடு என உள்ளதை, அப்படி சொல்ல மறுப்பதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை என ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே‌ராஜன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லைகளும் எனும் தலைப்பில் திருச்சியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ‌.கே.ராஜன், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பேரவையில் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தான் ஆளுநரின் பணி. மாறாக, ஒப்புதல் கையெழுத்து போட மாட்டேன் என சொல்வது ஆளுநரின் பணி அல்ல. அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அப்படியே வைத்துக்கொண்டு இருப்பது சிறுபிள்ளை தனமான விளையாட்டு போன்றது. அரசால் தரப்படும் உரையை பேரவையில் படிப்பது மட்டுமே ஆளுநரின் வேலை. அதிலுள்ளவற்றை நீக்கியோ, சேர்த்தோ படிக்க முடியாது. ஏனெனில், ஆளுநர் என்பவர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே.” என்றார்.

மேலும், ஆளுநர் உரை குறித்து முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தது மிகச் சரியான ஒன்று. அதுதான் அரசியலமைப்பு சட்டமும் கூட. அரசியலமைப்பு சட்டத்தில் தமிழ்நாடு என உள்ளதை, அப்படி சொல்ல மறுப்பதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை என்றும் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ‌.கே.ராஜன் பேசினார். ஏ.கே.ராஜன், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, “அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை கொள்வதோ மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது.” என்று தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது.

ஆனால், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவர் பேசியது தொடர்பாக மட்டுமே விளக்கம் அளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் பேசியது, பொங்கல் விழா அழைப்பிதழ் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆளுநர் மாளிகை அளித்த விளக்கமும் மேம்போக்கானது; மழுப்பலான விளக்கம் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.