வருத்தம் அளிக்கிறது, தமிழ் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன்- ஆளுநர் ரவி திடீர் கவலை

தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழர்களின் உணர்வுகளை சீண்டி பார்த்து வருவதாக அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று சொல்வதுதான் சரி என்று கருத்து தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். மேலும், சட்டசபையில் உரை வாசித்தபோது தமிழ்நாடு அரசு என்று குறிப்பிட்டிருந்ததை படிக்காமல் ‘இந்த அரசு’ என்று மாற்றி படித்தும், தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் பெயர்களை படிக்காமல் கடந்து சென்றதும் சட்டசபையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் முன்பே அவருக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்தார். சுதாரித்துக்கொண்ட ஆளுநர் சட்டசபையை விட்டு பாதிலேயே வெளிநடப்பு செய்தார். இந்நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் காயப்படுத்துவதாக கூறி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவிக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.

அதன்பிறகு ஆளுநர் ரவியின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தோன்றுகிறது. ஆளுநர் மாளிகையில் நடக்கும் கலந்துரையாடல்களில் தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துரைத்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு ஆளுநர் விளக்கம் அளித்தது கவனம் பெற்றது. அதில் அவர், காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்ள வேண்டாம் என்றார்.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் தமிழ்நாட்டை திடீரென ஆளுநர் புகழ்ந்துள்ளார். அதாவது, தமிழ்நாடு என்பதை தமிழர்கள் பெருமையாக கருதுகின்றனர். இங்குள்ள மக்கள் சிறப்பானாவர்கள். நம் நாட்டின் பிற பகுதிகள் தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்து வருகிறேன் என ஆளுநர் ரவி பேசியதாக தெரிய வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75-வது பவள விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது,சிவானந்த சரஸ்வதி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கலகலவென பேசிய ஆளுநர், தமிழகத்தை பொறுத்தவரை பொங்கல் உணவு மிகவும் பிடிக்கும் அதிலும் குறிப்பாக நெய் அதிகம் சேர்த்து சமைக்கும் பொங்கல் பிடிக்கும் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.