கஜானாவை முடிஞ்ச அளவு நிரப்பிட்டு, அடுத்த தேர்தல்ல ஓட்டுகளை அள்ள ஏதாவது செய்வாங்க!| Speech, interview, report

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை குறைந்து வருவதாகவும், வருவாய் கூடி உள்ளதாகவும், நிதி அமைச்சர் சொன்னது ஆறுதல் அளிக்கக்கூடியது. எனினும், ‘வளர்ச்சி பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு,3 சதவீதத்தில் இருந்து, ௧ சதவீதமாக குறைந்து விட்டது’ என, அவரே சொல்லி இருப்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

ஒருவேளை நிதி மேலாண்மை சரியாக கையாளப்பட வில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. திட்டமிடுதல், நிதி ஒதுக்குதல், செலவிடுதல் ஆகியவற்றை முறைப்படுத்துவதில், அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அதிகமா செலவழிச்சா நிதி பற்றாக்குறை வந்துடுமே… அதனால, ‘கஜானா’வை முடிஞ்ச அளவு நிரப்பிட்டு, அடுத்த தேர்தல்ல ஓட்டுகளை அள்ள ஏதாவது செய்வாங்க!

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில பொதுச் செயலர் ஆறுமுகம் பேட்டி:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எங்கள் சங்கம் சார்பில் போட்டியிட உள்ளேன். ‘டாஸ்மாக்’ கடையில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கின்றனர்.

தினமும், 100 கோடி ரூபாய்க்கு மது வாங்குகிறோம். எங்கள் பணத்தில் தான் அரசு செயல்படுகிறது. மது குடிப்போருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சட்டசபையில், எந்த, எம்.எல்.ஏ.,வும் பேசுவதில்லை. சட்டசபையில் எங்கள் குரலை பதிவு செய்வதற்காக இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

‘குடி’மகன்கள் அனைவரின் ஓட்டும் இவருக்கு விழுந்தா, மற்ற கட்சிகளுக்கு, ‘டிபாசிட்’ கூட தேறாதே!

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேட்டி:

ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் கேட்கும் வாக்குறுதிகளை செய்து முடிப்போம். புதிய கோரிக்கை வைத்தால், அதையும் ஏற்று செயல்படுத்துவோம். அரசின் திட்டங்கள், சாதனைகளை, முதல்வர் செயல்படுத்திய திட்டத்தை மக்களிடம் தெரிவித்து ஓட்டு சேகரிப்போம். இந்த ஆட்சியில் மக்கள் என்ன எதிர்பார்த்தனர்; தற்போது என்ன முடிவு செய்துள்ளனர் என்பது, மார்ச், 2ம் தேதி தேர்தல் முடிவில் தெரியப் போகிறது; மகத்தான வெற்றி பெறுவோம்.

latest tamil news

பணம் கொடுத்து, ஓட்டுகளை விலைக்கு வாங்க போறதால, பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்வு எல்லாத்தையும் மக்கள் மறந்துடுவாங்க என்ற தைரியத்துல இப்படி பேசுறாரு!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேச்சு:

தி.மு.க.,வினர், ‘கடவுள் இல்லை’ என்று கூறிவிட்டு, திருட்டுத்தனமாக சாமி கும்பிடுகின்றனர். அதிகாரிகள் பாதுகாப்புடன், மனைவி மற்றும் குடும்பத்தினருடன், கும்பாபிஷேகத்திற்கு சென்று வருகின்றனர்.

திருட்டுத்தனமா சாமி கும்பிட்ட தெல்லாம் அந்த காலம்… இப்பல்லாம் அமைச்சர்களே நெத்தி நிறைய விபூதி பூசி, காவடி எடுக்காத குறையா அலையுறாங்க!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.