டிஜிபி மாநாட்டில் மோடி பேச்சு காலாவதியான கிரிமினல் சட்டங்களை நீக்க வேண்டும்

புதுடெல்லி: அகில இந்திய டிஜிபிக்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென வலியுறுத்தியதோடு, காலாவதியான கிரிமினல் சட்டங்களை நீக்க வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளார்.தலைநகர் டெல்லியில் 57வது அகில இந்திய டிஜிபி மற்றும் ஐஜிக்கள் மாநாடு கடந்த 20ம் தேதி தொடங்கியது. 3 நாள் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:

காவல்துறையை இன்னும் அதிக உணர்திறன் மிக்க துறையாக உருவாக்க வேண்டும். அதற்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வதன் மூலம், எல்லைகளையும், கடலோர பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் போலீஸ் அமைப்புகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

காலாவதியான கிரிமினல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். திறன்களை பயன்படுத்துவதற்கும், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும் மாநில காவல்துறையும், ஒன்றிய புலனாய்வு அமைப்புகளும் தங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். ரோந்து செல்தல் போன்ற பாரம்பரிய வழிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். சிறை சீர்த்திருத்தங்கள் மூலமாக சிறை நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும்.

வளர்ந்து வரும் சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும், டிஜிபிக்கள் மாநாடு போன்று, மாநில மற்றும் மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.மாநாட்டில், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 600 போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.