நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐநா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசும்போது, “கல்வி பயில்வதைத் தடுக்கும் அனைத்து பாரபட்சமான சட்டங்களையும், நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது. குறிப்பாக ஆப்கனிஸ்தானில் இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பெண்கள் கல்வி பயில்வதற்கு விதிக்கப்பட்டுள்ள மூர்க்கத்தனமான தடையை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி தினத்தின் கருப்பொருள், ‘கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள்’ என்பதே” என்றார். ஆப்கானிஸ்தானில் சுமார் 80% சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.