ஜம்மு: பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான துல்லிய தாக்குதலுக்கு ராணுவம் ஆதாரம் தரத் தேவையில்லை என திக்விஜய் சிங் புகாருக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்முவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் பேசும்போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியதாகவும் இதில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறியது. ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் தரவில்லை. மத்திய அரசு பொய்களை கூறி வருகிறது” என்று குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து திக்விஜய் சிங் கூறியது அவரது சொந்த கருத்து என காங்கிரஸ் தரப்பில் நேற்றே விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜம்முவில் நேற்று ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது ராணுவம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். ராணுவ வீரர்கள் தங்கள் கடமையை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் மீதான எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இதற்கு ராணுவம் ஆதாரம் எதுவும் தரத் தேவையில்லை. இது தொடர்பாக திக்விஜய் சிங் கூறியது அவரது சொந்த கருத்து ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.