ஆன்லைன் சூதாட்டம், கடன் சேவை 232 சீன ஆப்களுக்கு ஒன்றிய அரசு தடை

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டம், அங்கீகரிக்கப்படாத கடன் சேவைகளை அளித்து வந்த சீனா உள்ளிட்ட வௌிநாட்டு நிறுவனங்களின்  232 செயலிகளுக்கு ஒன்றிய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேபோல், எளிய வழிகளில் கடன் தரும் இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத வௌிநாட்டு கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று அதனை திருப்பி தர முடியாமல் பல்வேறு பிரச்னைளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

சீனா உள்ளிட்ட வௌிநாட்டு செயலிகள் வாயிலாக இந்தியர்களின் தனிப்பட்ட ரகசியங்கள் திருடப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற செயலிகளை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சீனாவுடன் தொடர்புடைய 288 செயலிகளை ஒன்றிய அரசு ஆய்வு செய்ய தொடங்கியது. இந்த ஆய்வில் இந்திய மக்களின் தனிப்பட்ட தகவல்களை சீனா உள்ளிட்ட வௌிநாடுகள் திருடி இருக்கலாம்  என்று தெரிய வந்ததையடுத்து, இந்த செயலிகளை தடுக்க முடிவெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் அனுப்பிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தற்போது பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி, சீனா மற்றும் வெளிநாடுகளுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள், அங்கீகரிக்கப்படாத கடன் சேவை அளித்து வந்த 94 கடன் வழங்கும் செயலிகள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட செயலிகளின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.