3வது முறையாக கிராமி வென்றார் இந்தியாவை சேர்ந்த ரிக்கி கேஜ்| Ricky Cage from India won the Grammy for the 3rd time

லாஸ் ஏஞ்சல்ஸ்,-நம் நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், 41, மூன்றாவது முறையாக, ‘கிராமி’ விருது வென்றார்.

சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டு தோறும் கிராமி விருது வழங்கப்படுகிறது. இசைத் துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக இது கருதப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ரிக்கி கேஜ், பெங்களூரில் பல் மருத்துவம் படித்தார். அந்த பணியில் ஈடுபடாமல், இசைத் துறையில் கால் பதித்தார். ஏராளமான விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்துள்ள ரிக்கி கேஜ், தனியாக இசை ஆல்பம் தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, ‘தி போலீஸ்’ என்ற, பிரபல ராக் இசைக்குழுவின் டிரம்ஸ் இசைக்கலைஞர் ஸ்டீவர்ட் கோப்லாண்ட் உடன் இணைந்து, ‘டிவைன் டைட்ஸ்’ என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார்.

இந்த ஆல்பம், கடந்த ஆண்டுக்கான கிராமி விருதுகளுக்கான பட்டியலில், சிறந்த புதிய அலை பிரிவில் விருது வென்றது. இந்த ஆண்டு இதே ஆல்பம், சிறந்த அதிவேக இசை ஆல்பத்துக்கான பிரிவில் கிராமி விருது வென்றுள்ளது.

இணைந்து தயாரித்தவர்கள் என்ற முறையில், ரிக்கி கேஜ் மற்றும் ஸ்டீவர்ட் கோப்லாண்ட் ஆகியோர் இந்த விருதை பெறுகின்றனர்.

கடந்த 2015ல் ரிக்கி வெளியிட்ட, ‘விண்ட்ஸ் ஆப் சம்சாரா’ என்ற இசை ஆல்பத்துக்காக முதல்முறையாக கிராமி விருது வென்றார். இதுவரை மூன்று முறை இந்த விருதை பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் கிராமி விருதை ரிக்கி பெறும்போது, ”இந்த மிகப் பெரும் கவுரவத்தை என் தாய்நாடான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்,” என்றார்.

கிராமி விருதை மூன்றாவது முறையாக இந்தியர் பெற்று இருப்பது, நம் நாட்டு இசைத் துறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.