பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கேஜிஎஃப்-1’ மற்றும் ‘கேஜிஎஃப்-2′ ஆகிய படங்கள் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி பிளாக்பஸ்டர் அடித்ததை தொடர்ந்து ‘கேஜிஎஃப்’ நாயகன் யாஷ் அனைத்து தரப்பு விரும்பப்படும் நடிகராக மாறிவிட்டார். இந்த படத்தின் இரண்டு பாகங்களிலும் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி யாஷுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்களும் உள்ளனர், இவரது நடிப்பு மட்டுமின்றி தாடி, ஹேர்ஸ்டைல் அனைத்தையும் ரசிக்கின்றனர். நடிகர் யாஷின் கடைசி படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், யாஷின் தீவிர ரசிகர்கள் பலரும் தங்களது நடிகர் எப்போது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என்று ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.
யாஷ் அடுத்ததாக நடிக்கப்போகும் ‘யாஷ்-19’ படத்திற்காக பெரிய இயக்குனர்களிடம் வெகு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ‘யாஷ்-19’ படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அதேசமயம் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் யாஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கப்போவதாகவும், இந்த படத்தை நூறு கோடி ரூபாய் பட்ஜெட் பொருட்செலவில் எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி, சமீபத்தில் கார்த்தி நடிப்பில் சர்தார் எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் பி.எஸ்.மித்ரன் பிரத்தேயேகமாக யாஷுக்காக ஒரு கதையை உருவாக்கி இருப்பதாகவும், இந்த கதையை இயக்குனர் யாஷிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் கூறிய கதை கேஜிஎஃப் நாயகன் யாஷுக்கு பிடித்துவிட்டால் விரைவில் இந்த படத்தின் பணிகள் தொடங்கப்படும். சமீபத்தில் ஆஷாமீரா ஐயப்பன் என்பவரை இயக்குனர் மித்ரன் திருமணம் செய்துகொண்டார், இந்நிலையில் யாஷ்-மித்ரன் இணையும் திட்டம் உறுதியானால் இது கண்டிப்பாக மிகப்பெரிய திருமண பரிசாக அமையும் என்று கூறப்படுகிறது. விரைவில் யாஷ்-மித்ரன் இணையும் திட்டம் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.