அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவு; அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் காலிஸ்தானியர்கள் போராட்டம், கார் பேரணி

நியூயார்க்,

பஞ்சாப்பில் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பை நடத்தி வரும் அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் காலிஸ்தானியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பை நடத்தி வரும் அம்ரித்பால் சிங் என்பவர் அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில், அவரது ஆதரவாளர்கள் பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் வந்திருந்தனர்.

அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் தனிப்படை அமைத்து போலீசார் சிங்கை தேடி வந்தனர். எனினும், அவர் தப்பியோடிய குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் காலிஸ்தானியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் சமீப காலங்களாக இந்து கோவில்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனை காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தினர் என விசாரணைக்கு பின்னர் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் கோவில்களில் எழுதி இருந்தது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்துக்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த செயல்களால், பல்வேறு இந்தியர்கள் மற்றும் சீக்கிய தலைவர்களும் வருத்தம் அடைந்தனர். சம்பவத்திற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கடந்த 22-ந்தேதி உள்ள இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் ஒன்று திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள், இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால், போலீசார் அவர்களை கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பான்களை அமைத்தனர். ஆனால், அவற்றை நீக்கி விட்டு, தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

இதனால், அந்த பகுதியில், பாதுகாப்புக்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே லண்டன் பெருநகர போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இந்நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்னால், காலிஸ்தானியர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று முன்தினம் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அவர்கள் கோஷங்களை எழுப்பியபடியும், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய துணிகளை ஏந்தியபடியும் காணப்பட்டனர்.

அவர்கள் தூதர் மற்றும் தூதரக பணியாளருக்கு மிரட்டல் விடுத்தும் உள்ளனர். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சந்துவை அவர்கள் மிரட்டி உள்ளனர். தூதரகத்தில் பணியில் இருந்த ஊழியரையும் மிரட்டி உள்ளனர். சிறுவர், முதியவர் என வயது வித்தியாசமின்றி, பெண்கள் உள்பட அனைத்து தரப்பு காலிஸ்தானியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அவர்கள் வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜீனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்து உள்ளனர். தூதரகத்திற்கு வெளியே இந்திய பத்திரிகையாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் காலிஸ்தானியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக போராட்டக்காரர்கள், ரிச்மண்ட் ஹில் பகுதியில் உள்ள பாபா மக்கான் ஷா லுபானா சீக்கிய மையத்தில் இருந்து கார் பேரணி ஒன்றை தொடங்கி, மேன்ஹேட்டன் நகரின் மைய பகுதியில் அமைந்த டைம்ஸ் சதுக்கம் வரை சென்றனர். இதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சிங்குக்கு ஆதரவாக அவரது புகைப்படங்கள் அடங்கிய எல்.இ.டி. விளக்குகளை கொண்ட பலகைகளை ஏந்தியபடி, பல கார்களில் காலிஸ்தானிய கொடிகளை அவர்கள் ஏந்தி சென்றனர். அவற்றின் இடையே, இசையை எழுப்பியபடியும், பாட்டு பாடியும் மற்றும் வாகன ஹாரன் சத்தம் எழுப்பியபடியும் எண்ணற்றோர் சென்றனர்.

இந்த பேரணியில் காலிஸ்தானியர்களுக்கு ஆதரவான கோஷங்களும் எழுந்தன. ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியும், அம்ரித்பால் சிங்கை விடுவிக்க வேண்டும் என்ற பலகைகளை ஏந்தியும் சென்றனர். இதனை தொடர்ந்து, நியூயார்க் நகர காவல் துறையினர் வேன்கள் மற்றும் கார்களில் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இங்கிலாந்தின் லண்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடந்தது போன்று வாஷிங்டனையும் அவர்கள் முற்றுகையிட கடந்த சனிக்கிழமை முயன்றனர். எனினும், அமெரிக்க போலீசார் மற்றும் உளவு அமைப்பு அதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தடுத்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.