இதுக்கெல்லாமா லீவ் கேட்பீங்க? மின்பொறியாளரின் லீவ் லெட்டரை பார்த்து அதிர்ந்த மின்வாரியம்!

நாளை மின்வாரிய பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியில் ஈடுபட உள்ள சூழலில், புதுக்கோட்டையை சேர்ந்த உதவி மின் பொறியாளர் ஒருவர் விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட மின்வாரிய பணியாளருக்கு இந்த காரணங்களுக்காகவெல்லாம் விடுமுறை அளிக்க முடியாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை மின்வாரிய ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர். இந்த சூழலில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் விடுப்பு கோரி உயர் அதிகாரிகளுக்கு இன்று விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தான் புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் வளர்ச்சி பிரிவில் உதவி மின் பொறியாளராக பணியாற்றும் ரகுநாதன் என்பவர் விடுமுறை வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.
image
அந்த விடுமுறை விண்ணப்பத்தில், “தான் கடந்த சில வாரங்களாக பணியாளர்கள் வாரியத்தாலும், தொழிற்சங்க அமைப்புகளாலும், அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அதிலிருந்து மீண்டு வந்து வாரிய பணிகளை செவ்வனே தொடர வேண்டும் என விரும்புகிறேன். அதனால் என் மன அமைதியை வேண்டி, எனது வீட்டிலேயே காந்தியடிகளின் உருவப்படத்திற்கு முன்பு அமர்ந்து தியானம் மேற்கொள்ளவிருக்கிறேன். இதற்கு எனக்கு ஒருநாள் விடுப்பு வேண்டும்” என்று உயர் அதிகாரிகளிடம் விடுமுறை கடிதம் கொடுத்துள்ளார்.
இந்த விண்ணப்பக் கடிதத்தை பார்த்து அதிர்ந்து போன மின்வாரிய உயர் அதிகாரிகள், இது போன்ற காரணங்களுக்கெலாம் விடுமுறை அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) முருகேசனிடம் கேட்டபோது, இந்த காரணங்களுக்காக விடுமுறை கொடுக்க முடியாது என்று அப்போதே அவரிடம் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
image
புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் உதவி மின் பொறியாளர் ஒருவர் மன உளைச்சலில் இருந்து வெளிவர தியானம் செய்ய வேண்டும் என்பதற்காக, உயர் அதிகாரிகளிடம் விடுமுறை விண்ணப்பம் கடிதம் கொடுத்த நிகழ்வு சர்ச்சைகளையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.