டெல்லியில் தலைப்பாகை இல்லாமல் நடந்துசென்ற அமரித்பால் சிங்.. வெளியான புதிய சிசிடிவி காட்சி

போலீசாரால் தேடப்பட்டு வரும் பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், தற்போது தலைப்பாகை இல்லாமல் வெளியேறும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது. நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த பஞ்சாப் காவல் துறை, தலைமறைவாகியுள்ள அம்ரித்பால் சிங்கை கைது செய்ய முயன்று வருகிறது.
image
அவர்மீது ஏற்கெனவே 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் அம்ரித்பால் சிங் எதிராக பிறப்பிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடந்த மார்ச் 21ஆம் தேதி கிழக்கு டெல்லியின் மதுவிஹார் பகுதியில், அம்ரித்பால் சிங் தலைப்பாகை இல்லாமல் நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்திவரும் காவல் துறை, அவரைப் பிடிக்கவும் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.
அவர், அண்டை நாடான நேபாளத்துக்குத் தப்பிச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை, வேறு நாட்டுக்குத் தப்பிச் செல்லவிடாமல், தடுத்து நிறுத்தும்படி நேபாள அரசிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. அதோடு அம்ரித்பால் சிங் எப்படி இருப்பார் என்பது குறித்தும், அவரது பாஸ்போர்ட் விவரங்களையும் நேபாளத்துக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கிறது. இதற்கிடையே அம்ரித்பால் சிங் இந்தியா-நேபாள எல்லை வழியாக தப்பிச் செல்லக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே இருநாட்டு எல்லையோரத்தில் பணியில் இருக்கும் பாதுகாப்பு படையினர் உஷாராக இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
image
முன்னதாக, 100க்கும் மேற்பட்ட அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர்கள் 5 பேர் அசாமில் உள்ள திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பல்வேறு தோற்றத்துடன் காணப்படும் அம்ரித்பால் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டு பஞ்சாப் போலீசார், அவரை கைது செய்வதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
இந்தச் சூழலில்தான் அம்ரித்பால் சிங் குருத்வாராவிற்குச் சென்று, அங்கு தனது ஆடைகளை மாற்றிக்கொண்டு 3 உதவியாளர்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றிருப்பதாகப் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது, அவர் தலைப்பாகை இல்லாமல் வெளியேறும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.