நிதியமைச்சர் சட்டப் பேரவையில் முன்வைத்த இறுதி துணை மதிப்பீடுகள்!

தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை இன்று (2023 மார்ச் 28) சட்டமன்றப் பேரவை முன் வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர், “2022-2023 ஆம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை இம்மாமன்றத்தின் முன் சமர்ப்பிக்கிறேன். துணை மானியக் கோரிக்கைகளை விளக்கிக் கூறும் விரிவான அறிக்கையினை இம்மாமன்றத்தின் முன் வைக்கின்றேன்.

1.இந்த அவையில் வைக்கப்பட்டுள்ள இந்தத் துணை மதிப்பீடுகள் மொத்தம் 26,352.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில், 19,776.50 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும், 3,642.26 கோடி ரூபாய் மூலதனக் கணக்கிலும், 2,934.23 கோடி ரூபாய் கடன் கணக்கிலும் அடங்கும்.

2. 2022 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 18 ஆம் நாளன்று 2022-2023 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் “புதுப்பணிகள் ‘ மற்றும் ‘புது துணைப்பணிகள்’ குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவது இத் துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும்.

3. துணை மதிப்பீடுகளின் கூடுதல் நிதி ஒதுக்கம் தேவைப்படும் சில முக்கிய இனங்கள் பின் வருமாறு:

மானியக் கோரிக்கை எண்.12 – கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை), நகைக் கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மானியக் கோரிக்கை எண்.13 – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை), போக்குவரத்துச் செலவினங்களுக்காக உணவு மானியத்தில் 2,140 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மானியக் கோரிக்கை எண் 48 – போக்குவரத்துத் துறை- ஓய்வுபெற்ற மாநிலப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஓய்வுக்கால பலன்களுக்காக 1,032 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மானியக் கோரிக்கை எண் 8 – பால்வளம் (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) – தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்திற்கு வட்டியில்லாக் கடனாக 150 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மானியக் கோரிக்கை எண் 34 – நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை – ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டு இயக்கம்’ மற்றும் ‘சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கம்’ ஆகியவற்றின் நிலுவைச் செலவினங்களுக்காக 1,393.38 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பேரவைத் தலைவர் அவர்களே 2022-2023ஆம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை இம்மாமன்றம் ஏற்று இசைவளிக்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.