ஆவின் தயிருக்கு வந்த சிக்கல்… இனி ’தாஹி’… இதிலும் இந்தியை நுழைக்கும் டெல்லி!

தமிழகத்தை பொறுத்தவரை இந்தி திணிப்பு என்பதை ஒருபோதும் ஏற்காது. அதற்கு திராவிடக் கட்சிகளின் பங்களிப்பும், தமிழ்ப் பற்றும் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தி திணிப்பிற்கு எதிராக நடத்தாத போராட்டங்கள் இல்லை. ஒலிக்காத குரல்கள் இல்லை. இந்த சூழலில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் தயிர் பாக்கெட்கள்

அதாவது, ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்கள் மீது ’தயிர்’ என்று எழுதக் கூடாது. அதற்கு பதிலாக ‘தாஹி’ என்ற இந்தி சொல்லை எழுத வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளதாக தெரிகிறது. இது மத்திய அரசு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

FSSAI எழுதிய கடிதம்

FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. உணவு பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் FSSAI-இடம் ஒப்புதல் பெற வேண்டும். இந்த அதிகாரத்தை வைத்து கொண்டு மாநில மொழிக்கு பதிலாக இந்தியை திணிப்பது எந்த வகையில் நியாயம்? எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

மூன்று மாநிலங்களுக்கு சிக்கல்

தமிழகத்திற்கு மட்டுமல்ல. கர்நாடகாவில் நந்தினி, கேரளாவில் மில்மா ஆகிய பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கும் கடிதம் அனுப்பியுள்ளது. மாநில மொழிச் சொற்களை பயன்படுத்தக் கூடாது. தாஹி என்ற இந்தி சொல்லை பயன்படுத்துங்கள். இதற்கு கர்நாடகாவிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழர்கள் அதிரடி

தமிழகத்தில் முன்னதாக கல்வி நிறுவனங்கள், வானொலிகள், பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த வரிசையில் ஆவினிலும் கைவைக்க பார்க்கிறது. எந்த வகையில் இந்தியை திணிக்க முயற்சித்தாலும் தமிழர்கள் அதை முறியடிப்பர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கண்டனம்

குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், FSSAI என்பது இந்தியை திணிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு அல்ல. இதை அந்த அமைப்பின் பொறுப்பாளர்களும், இயக்குபவர்களும் உணர வேண்டும். ஆவின் நிறுவன தயிர் பாக்கெட்களில் தயிர் என்ற சொல் மட்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

தாஹி வேண்டாம். இதுதொடர்பாக எந்த நெருக்கடிக்கும் ஆவின் நிறுவனம் பணியக் கூடாது. இந்தியை இந்தியாகவே திணித்தால் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால், இந்தி சொற்களை தமிழில் எழுதி திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது. தமிழக அரசு இந்த சிக்கலில் என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது எனத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.