சென்னை: Nude Scene On Viduthalai (விடுதலை படத்தின் நிர்வாண காட்சி) விடுதலை படத்தில் இடம்பெற்றிருக்கும் நிர்வாண காட்சி குறித்து முதலில் எதுவுமே சொல்லவில்லை நடிகை தென்றல் தெரிவித்திருக்கிறார்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எல்ரெட் குமார் படத்தை தயாரித்திருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை
ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனின் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் படம் வெளியானது.

விடுதலைக்கு கிடைத்த வரவேற்பு
திரையரங்குகளில் படம் வெளியானதும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று விடுதலை படத்தை ரசித்துவருகின்றனர். வெற்றிமாறன் இந்தப் படத்தின் மூலம் முக்கியமான அரசியலை கையில் எடுத்திருப்பதாகவும்; அதை நேர்த்தியாகவும், நேர்மையாகவும் சொல்லியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் படத்தை கொண்டாடிவருகின்றனர். குறிப்பாக சூரியின் நடிப்பை ரசிகர்கள் புகழந்து தள்ளியிருக்கின்றனர்.

படத்தில் வந்த நிர்வாண காட்சி
விடுதலை படத்தில் ஏகப்பட்ட சீன்கள் ரசிகர்களின் மனதை அசைத்துப்பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் பெண்களை காவல் துறையினர் நிர்வாணப்படுத்தும் காட்சி. அந்தக் காட்சிகள் சோளகர் தொட்டி நாவலை நினைவுப்படுத்தினாலும் வெற்றிமாறன் அந்தக் காட்சியை மிக திறமையாக ஆபாச எண்ணம் ரசிகர்கள் மனதில் தோன்றிவிடாமல் எடுத்திருக்கிறார் என்ற கருத்தும் எழுந்திருக்கிறது.

அந்தக் காட்சி பற்றி சொல்லவே இல்லை
இந்நிலையில் அந்த காட்சியில் நடித்த தென்றல், நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ” முதலில் போலீஸ் ஸ்டேஷனில்தான் சீன் என்று மட்டும் சொன்னார்கள்.ஆனால் அந்த மாதிரி நடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவே இல்லை. அதேபோல்தான் படப்பிடிப்பிலும் இருந்தது . ஆடையில்லாமல் நடிக்கவில்லை, சிஜியில் எடிட் பண்ணி போட்டதுதான் அந்த மாதிரி காட்சிகள்” என்றார்.

விடுதலைக்கு வந்த விமர்சனம்
விடுதலை படத்தை ரசிகர்கள் கொண்டாடிவந்தாலும் ஒருதரப்பினர் விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர். அதாவது, வெற்றிமாறன் தனது மேக்கிங்கிலிருந்து இந்தப் படத்தில் கொஞ்சம் நழுவியிருக்கிறார். எப்போதும் ஆரோக்கியமான உரையாடலை தொடங்கிவைக்கும் வெற்றி, இந்தப் படத்தில் அதனை நிகழ்த்துவதற்கு தவறிவிட்டார் எனவும் விமர்சனங்கள் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது முதல் பாகம்தான் இரண்டாம் பாகத்தில்தான் ஒட்டுமொத்த கதையும் இருக்கிறது. எனவே இரண்டாம் பாகத்தை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள் என விமர்சனங்கள் வைப்பவர்களுக்கு வெற்றிமாறனின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.